கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக முடங்கிக் கிடந்த தேனி - இடுக்கி மாவட்ட எல்லைகளில் வாகனப் போக்குவரத்து திறக்கப்பட்டதும் சகஜ நிலைக்குத் திரும்புவதைப் போல் இருந்த முல்லைப் பெரியாறு அணை விவகாரம், மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது!
சபரிமலையில் ஜனவரி 15-ம் தேதி மகரஜோதி. அது முடிந்ததும், தமிழக மக்களைப் போலவே கேரளத்து மக்களும் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை மக்கள் போராட்டமாக எடுத்துச் செல்ல முடிவு செய்திருக்கிறார்கள்.
'தமிழகத்துக்குத் தண்ணீர் பிரச்னை; கேரளாவுக்கு உயிர்ப் பிரச்னை’ என்று கேரளாவுக்குள் போஸ்டர்கள் இப்போதே முளைத்து உள்ளன. இதனைக் கேட்டுக் கொதிப்பில் இருக்கும் கம்பம், கூடலூர் பகுதி விவசாயிகள் நம்மிடம், ''இதுவரை நாங்கள் நடத்திய போராட்டங்களை தமிழக அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை. சரியாகக் கையாளவும் இல்லை. அதற்கு மாறாக, போராடச் சென்ற எங்கள் மீது தடியடி நடத்தி 200-க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். இனிமேலும், எங்களுக்குக் கிடைக்கும் தண்ணீருக்கு ஆபத்து வரும் என்பது தெரியவந்தால், கூடங்குளம் போலவே நிரந்தரமாகக் குமுளியில் டென்ட் அடித்து, லட்சக்கணக்கான மக்களும் ஒரே இடத்தில் அமர்ந்து போராடப் போகிறோம்'' என்று சூளுரைத்தனர்.
இத்தகைய சூழ்நிலையில் முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகளின் சோதனை ஒன்று தொடங்கி உள்ளது. 'எம்பவர் கமிட்டி’யால் நியமிக்கப்பட்ட ஐவர் குழுவில் உள்ள டெக்னிக்கல் கமிட்டி உறுப்பினர்கள் முல்லைப் பெரியாறு அணையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளைச் செய்துள்ளனர். அந்த வகையில் இப்போது அணையில் ஐந்து இடங்களில் துளை போட்டு மண் எடுத்து ஆய்வு செய்ய மகாராஷ்டிராவைச் சேர்ந்த 15 பேர் அடங்கிய தொழில்நுட்பக் குழு பெரியாறு அணைக்கு வந்துள்ளது.
இவர்கள் செய்ய இருக்கும் பரிசோதனை குறித்து அணை யில் பணிபுரியும் பொறியாளர்களிடம் கேட்டோம். ''உலகத்தில் பயன்பாட்டில் உள்ள அனைத்து வகையாக அணைகளுக்கான சோதனைகளையும் முல்லைப் பெரியாறில் செய்து பார்த்து விட்டனர். அனைத்துச் சோதனைகளையும் வென்றுவிட்டது முல்லைப் பெரியாறு அணை. மீதம் இருந்தது இந்த ஒரே ஒரு சோதனைதான். இந்தச் சோதனையின்படி அணையின் மேற்பரப்பில் இருந்து பூமியில் 800 அடி ஆழம் வரை NX Diamond drilling என்ற இயந்திரத்தைப் பயன்படுத்தி ஆழமாக ஐந்து இடங்களில் துளைபோட்டு, மண் எடுத்து ஆய்வு செய்யப்போகிறார்கள். அணையின் மேல் ஒரு துளை போட 20 நாட்கள் முதல் 30 நாட்கள் வரைகூட ஆகலாம். ஓட்டையின் அகலம் 6 அடியாக இருக்கும். இந்தத் துளை போடும் காரணத்தால், அணையில் அதிர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அதிர்வுகளைத் தவிர்க்க 'பிளாட்ஃபார்ம்’ போட்டுத் துளை போட இருக்கிறார்கள். ஆனாலும் அதிர்வுகளைத் தவிர்க்க முடியாது. இதனால் அணைக்குப் பலவீனம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
அணையில் சோதனை செய்யக் கொண்டுவந்த மெஷின்கள் எண்ணிக்கை 33. இவை பெட்ரோல் எடுக்கும்போது பூமியில் துளை போடுவதற்குப் பயன்படுத்தப்படும் இயந்திரங்கள். துளைகளைப் போட மற்றும் துளைகளை மூட சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவாகுமாம். இதுவரை அணையில் சோதனை செய்வதற்கே பல கோடிகள் செலவு செய்யப்பட்டுவிட்டன. அணையில் செய்யப்படும் ஆய்வுகளைவிட, துளையை அடைப்பது மிகப் பெரிய வேலை. ஒரு துளையை அடைக்க எப்படியும் 1,000 மூட்டைகள் சிமென்ட் தேவைப்படும். அணையின் பாதுகாப்பும்... ஆயுளும் இந்தச் சோதனையில்தான் அடங்கி இருக்கிறது'' என்று நம்மை அதிரவைத்தனர்.
இந்த சோதனையிலும் முல்லைப் பெரியாறு வெற்றி பெறட்டும்!
as
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment