Monday, February 28, 2011

தமிழக மீனவர்களுக்கு துப்பாக்கி குடுக்கப்படுமா?

உலகிலுள்ள எந்த நாடும் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை சுட்டுக் கொல்வதில்லை. பாகிஸ்தான் கூட எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதே வழக்கமாக இருந்திருக்கிறது. காரணம், சர்வதேசகடல் சட்டம் சரத்து 73, மீனவர்களை கடலில் சுடுவதை தடை செய்திருக்கிறது. இச்சட்டத்தில் உலகிலுள்ள அனைத்து நாடுகளும் கையொப்பம் இட்டுள்ளன. இதில், இந்தியாவும், இலங்கையும் கூட அடக்கம்.

ஆனால், இச்சட்டத்தை இலங்கை அரசு இதுவரை மதித்து நடந்ததில்லை. இந்திய அரசும் இதை தட்டிக் கேட்டதில்லை. பதிலாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை குருவிகள் போல சுட்டுத் தள்ளுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. இதுவரை 500 க்கும் மேற்ப்பட்ட மீனவர்கள் இப்படி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் மீது 600க்கும் மேலான முதல் தகவல் அறிக்கைகள் பதியப்பட்டு விசாரணையின்றி கடலோர மாவட்டங்களில் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் கொலை, கொலை முயற்சி மற்றும் ஆயுத சட்டப்படியான கடுமையான குற்றங்கள். இக்குற்றவாளிகளை இந்திய நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த இந்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 12.01.2011 மற்றும் 22.01.2011 ஆகிய தேதிகளில் வீரபாண்டியன், ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொடூரமாக சுடப்பட்டு, கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளனர். இது சர்வதேச கடல்சட்டங்களை மீறிய செயலாகும். 2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்ட இந்திய – இலங்கை கூட்டறிக்கைப்படி இந்திய மீன் பிடி படகுகளை சுடக்கூடாதென ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இலங்கை அரசு இதையும் நடைமுறைப்படுத்தவில்லை.

இந்திய அரசியல் சட்டம் சரத்து 19 (1) ( g) ன் படி மீன்பிடி உரிமை, தமிழக மீனவர்களின் அடிப்படை உரிமையாகும். அதே போல் இந்திய அரசியல் சட்டம் சரத்து 21ன்படி மீனவர்களூக்கு வாழ்வுரிமையும் அடிப்படை உரிமையாகும். தனது குடிமக்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டியது அரசியல் சட்டப்படி அரசின் கடமையாகும். இப்படி தனது குடிமக்களின் அடிப்படை உரிமைகளான தொழில் உரிமை, வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டிய இந்திய அரசு அக்கடமையிலிருந்து தவறியிருக்கிறது.

அத்துடன் இலங்கையில் தனது மேலாண்மையை நிலைநாட்டுவதற்க்காக தனது சொந்த நாட்டு மக்களின் நலன்களைப் பலியிட்டு வெறுமனே ராஜதந்திர நாடகங்களை நடத்தி வருகிறது. ஆனால், ஆஸ்திரேலியாவில் பணக்கார மாணவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட போதும், மும்பையில் தாஜ் ஓட்டல் தாக்கப் பட்ட போதும், சிலிர்த்து எழுந்தது. தேசபக்தி நாடகமாடி மக்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. குஜராத் தொழிலதிபர்களின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் சோமாலியா கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு ஒரு உயிர் கூட சேதமடையாத நிலையில் இந்திய கடற்படையை விரைந்து அனுப்பி நடவடிக்கை எடுத்தது.

இப்படி ஆளும் வர்க்க நலனுக்காக மட்டுமே செயல்படும் இந்திய அரசு, தமிழக மீனவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது. இதனால் தமிழக மீனவர்கள் இந்திய அரசு தங்களைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஆகவே மீனவர்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்சும், இலவசமாகத் துப்பாக்கியும் இந்திய அரசு வழங்க வேண்டும். இத் தற்காப்புரிமை இந்திய தண்டணைச் சட்டம் பிரிவுகள் 96 – 100; வன்கொடுமை தடுப்புச் சட்டம் விதி 3 ஆகியவற்றின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை கடற்படை செய்துள்ள குற்றங்கள், அது தொடர்பான வழக்குகள், வழக்குகள் மீதான இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து ஒரு நீதிபதியை நியமித்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ் நாடு அமைப்பின் மதுரைக் கிளை துணைச் செயலரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான சே.வாஞ்சி நாதன், மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்.

0 comments:

Post a Comment