Sunday, February 27, 2011

ஆதரவாளர்களுக்கு ஆயுதம் வழங்கும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.27:உள்நாட்டில் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார் அந்நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி.

ஆயுதக் கிடங்குகளை எனது ஆதரவாளர்களுக்கு திறந்துக் கொடுத்துள்ளேன் என கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

திரிபோலியில் போலீஸ் நிலையங்கள் ஆயுதம் ஏந்திய கத்தாஃபியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலிருப்பதாக AP நியூஸ் கூறுகிறது. இவர்களின் ட்ரக்குகள் தெருக்களில் ரோந்து வந்துக் கொண்டிருக்கின்றன. லிபியாவின் பல பகுதிகளிலும் ராணுவம் மக்களுடன் சேர்ந்ததால் இந்த நடவடிக்கையை கத்தாஃபி மேற்கொண்டுள்ளார்.

கத்தாஃபி ஆதரவாளர்களின் தாக்குதலில் நேற்றும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். லிபியாவுக்கு எதிரான தடையை பிரகடனப்படுத்திய உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் இரவு கையெழுத்திட்டார்.

திரிபோலியில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. ராணுவத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பிரிட்டனும் கத்தாஃபியின் சொத்துக்களை முடக்க தீர்மானித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பிய யூனியனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக்கூட்டம் ஒன்றை கூட்டுகிறது. மக்களை கொல்லும் கத்தாஃபிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளார்.

லிபியாவை கவுனிசிலிருந்து வெளியேற்ற ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஒருமுகமாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. கத்தாஃபி அரசு நடத்தும் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே,"நான் மக்கள் மத்தியில்தான் உள்ளேன் கடைசி வரை போராடுவேன் வெளிநாடுகள் அத்துமீறி நுழைவதை என்ன விலைக் கொடுத்தும் தடுப்பேன்" என கத்தாஃபி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 comments:

Post a Comment