Friday, February 18, 2011

பிஜேபி தலைவர் இல.கணேசனுக்கு முதல்வர் நேரில் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை,பிப்.18:பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசனுக்கு முதல்வர் கருணாநிதி நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் தனது 66-வது பிறந்த நாளை சென்னையில் புதன்கிழமை கொண்டாடினார். காலை 9.30 மணிக்கு இல.கணேசனின் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் கருணாநிதி, அவருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹண்டே உள்ளிட்டோர் இல. கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இல.கணேசன் கூறியது:
முதல்வர் கருணாநிதி ஈரோட்டு பாசறையில் வளர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். நான் ஆர்.எஸ்.எஸ். பாசறையில் வளர்ந்தவன் என்பது கருணாநிதிக்கு தெரியும். கொள்கை ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நட்பு ரீதியாக தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு உதாரணமாக முதல்வர் திகழ்கிறார்.

ஆனாலும், முதல்வர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இந்த வயதில் வீடுதேடி வந்து எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது குறித்து நான் பெருமிதம் அடைகிறேன் என்றார்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் இல.கணேசனுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன் உள்ளிட்டோர் இல. கணேசனுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

முதல்வருக்கு ஆர்.எஸ்.எஸ். புத்தகம் பரிசு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் கருணாநிதிக்கு, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் சுயசரிதையான "என் தேசம் என் வாழ்க்கை' என்ற நூலையும், ஆர்.எஸ்.எஸ். முன்னாள் தலைவர் தேவரஸ் எழுதிய தமிழ் மொழிபெயர்ப்பு நூலையும் இல. கணேசன் பரிசாக வழங்கினார்.

ஆர்.எஸ்.எஸ். குறித்து வீடு வீடாக மக்கள் தொடர்பு இயக்கம் என்ற பெயரில் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதனை முதல்வர் கருணாநிதியிடம் விளக்கிய இல.கணேசன், ஆர்.எஸ்.எஸ். குறித்த புத்தகத்தை அவரிடம் வழங்கினார்.


0 comments:

Post a Comment