Thursday, February 24, 2011

லிபியாவில் மக்கள் எழுச்சி தீவிரம்: தனிமைப்படுத்தப்படும் கத்தாஃபி

திரிபோலி,பிப்.24: 42 ஆண்டுகளாக லிபியாவின் அதிகாரத்தில் தொடரும் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்றுவரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தைத் தொடர்ந்து லிபியாவின் உள்துறை, சட்டத்துறை அமைச்சர்கள் ராஜினாமாச் செய்துள்ளனர்.

கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாமும், கத்தாஃபியின் மிக நெருங்கிய நண்பரான யூசுஃப் ஸவானியும் ராஜினாமாச் செய்துள்ளனர். சட்ட அமைச்சர் முஸ்தஃபா அப்துல் ஜலீல் ராஜினாமாவை முதலில் அறிவித்தார். ராணுவத்திடம் போராட்டத்திற்கு ஆதரவு தருமாறும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை அங்கீகரிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

இதன்பிறகு உள்துறை அமைச்சர் ஜெனரல் அப்துல் ஃபத்தாஹ் யூனுஸும் ராஜினாமாச் செய்தார். பிப்ரவரி 17-ஆம் தேதி புரட்சிக்காக தான் வகித்த அனைத்து பொறுப்புகளிலிருந்து ராஜினாமாச் செய்வதாக அவர் அல்ஜஸீரா தொலைக்காட்சி மூலமாக அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது கொடூரமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டதை கண்டித்து யூசுஃப் ஸவானி ராஜினாமாச் செய்துள்ளார். முன்னர் ஐ.நாவின் லிபியாவின் பிரதிநிதிகள் நாட்டில் கூட்டுப்படுகொலை நடப்பதாக குற்றஞ்சாட்டி கத்தாஃபியை வெளியேற்ற ராணுவத்தின் உதவியை கோரியிருந்தனர். மேலும் பல தூதரக பிரதிநிதிகளும், சர்வதேச சமூகமும் மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது
கத்தாஃபிக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய கத்தாஃபி, கொலைவெறித்தனமான பேட்டியை அளித்திருந்தார். இதன் பிறகு மக்கள் எழுச்சிப் போராட்டம் மேலும் வலுவடைந்தது.

இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை தங்கள் நாட்டிற்கு அழைத்துவர துவங்கியுள்ளன.

லிபியா மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் 1000 பேர் மரணித்திருக்கலாம் என உறுதிச் செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன. ஆனால், 198 சாதாரண மக்களும், 111 ராணுவத்தினர் உள்பட 309 பேர்தாம் கொல்லப்பட்டதாக லிபியாவின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மக்கள் மீது கொடூரமான ஆயுதங்கள் மூலம் ராணுவம் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன. கைது செய்யப்பட்டவர்களை மிகக் கொடூரமாக சித்திரவதைச் செய்த புகைப்படங்கள் நேற்று வெளியாகின.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலும், வெளிநாடுகளும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளன. அமைதியை உடனடியாக நிலைநாட்டவேண்டுமென இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

அதேவேளையில் கிழக்கு லிபியாவில் மேலும் அதிகமான நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். மிஸுரத்தா, ஸப்ரத்தா, ஸாவியா ஆகிய நகரங்களை புரட்சியாளர்கள் கைப்பற்றினர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது லிபிய சர்வாதிகார அரசு கொடூர அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட சூழலில் அந்நாட்டுடனான அனைத்து ஆயுத வியாபாரங்களையும் நிறுத்திவைக்க ஐரோப்பிய யூனியன் தீர்மானித்துள்ளது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


0 comments:

Post a Comment