இன்று தமிழக அரசுக்கு உள்ள கடன் தொகை தற்போதய நிலவரப்படி ஒரு லட்சம் கோடியை தாண்டி விட்டது. இவை அனைத்தும் இலவச திட்டங்களால் வந்ததாக பொருளாதார நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பிக்கிறார்கள். அன்பழகனோ இலவச திட்டங்கள்தான் பலரின் வயிற்றைக் கழுவுகிறது. எனவே அதை குறை சொல்லாதீர்கள் என்கிறார். தமிழக அரசு போடும் இலவச திட்டங்களில் சத்துணவை தவிர மற்ற அனைத்து திட்டங்களும் விழலுக்கு இறைத்த நீர்தான். யாருக்கும் எந்த பயனையும் இந்த இலசவ திட்டங்கள் ஏற்ப்படுத்தப் போவதில்லை.
இலவச கலர் டிவி கொடுக்கச் சொல்லி யார் அழுதது?சினிமா நடிகர்களுக்கு இலவச மனைகளாம். கோடிகளில் புரண்டு கருப்புப் பணத்திலேயே வாழ்க்கையை ஓட்டி இளைய சமுதாயத்தை கெடுத்து தொலைக்கும் இந்த கூத்தாடிகளுக்கு ஏழைகளின் வரிப் பணத்தில் இலவச வீடு. இது நியாயமா கலைஞரே!
மணி மண்டபங்கள், பல தலைவர்களுக்கும் சிலைகள் என்று கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டுகிறீர்கள். இந்த மணிமண்டபங்களால் பொது மக்களுக்கு ஏதும் பயன் இருக்கிறதா? இதற்கு ஒதுக்கக் கூடிய பணத்தை கிராமங்கள் தோறும் குளங்களை தூர்வாரி வீணாக கடலில் கலக்கும் மழை நீரை சேகரிக்கக் கூடாதா? ஒரு பகுத்தறிவாதி சிலைகளை திறக்கலாமா? அதற்கு சென்று மாலை போட்டால் அதற்கு விளங்குமா?பெரியாரின் கொள்கைகளை காற்றில் பறக்க விட்டு இன்று மஞ்சள் துண்டோடு வலம் வருகிறீர்களே! கலைஞரே இது நியாயமா?
எண்ணிக்கையிலேயே அடங்க முடியாத அளவுக்கு உங்கள் அமைச்சர் ராஜா ஊழல் பண்ணியது உங்களுக்கு தெரியாமல் நடந்திருக்குமா? 'நானும்,கண்ணதாசனும் ஆரம்ப காலங்களில் சென்னையில் சிங்கிள் டீயை பகுதியாக்கி குடிப்போம். அவ்வளவு வறுமை'என்று முன்பு எங்கோ படித்தது ஞாபகம் வருகிறது. இன்று ஆசியாவில் உள்ள பணக்காரர்களில் நீங்களும், உங்கள் குடும்பமும் வருகிறதே! அனைத்தும் கதை வசனம் எழுதிதான் வந்ததா! மெய்யாலுமா கலைஞரே!
எவ்வளவுதான் பணம் இருந்தாலும் பசி தீரும்வரைதான் சாப்பிட முடியும். தூங்குவதற்கு ஆறடி இடம் போதும். உடுத்திக் கொள்ள வேட்டியும் சட்டையும் ஒருவனுக்கு ஐந்து ஆறு செட்கள் இருந்தாலே போதும். தங்குவதற்கு ஒரு வீடு இருந்தால் போதும். ரோட்டிலே கிடக்கும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் எது தேவையோ அதுதான் உங்களுக்கும் தேவை. எனவே இத்தனை கோடிகளை வைத்துக் கொண்டு அதுவும் இந்த தள்ளாத வயதில் என்ன சுகத்தை அனுபவித்து விடப் போகிறீர்கள்? எனவே தேவைக்குப் போக பாக்கி சொத்துக்களை எல்லாம் அரசாங்கத்திடமே கொடுத்துடு ராசா! உங்கள் மேல் உள்ள பிரியத்தில்தான் சொல்கிறேன். சரி கொடுக்க மனது இல்லா விட்டாலும் இனிமேலாவது லஞ்சம் இல்லாத ஒரு ஆட்சியை வழங்க ஸ்டாலினுக்கு அறிவுரையாவது வழங்கக் கூடாதா? உங்களை தூக்கி எறிந்து விட்டு அந்த அம்மாவை உட்கார வைக்கலாம் என்றால் அதுவோ மதம் முழுங்கி மகாதேவன். தமிழ்நாட்டையே வித்துட்டு அந்தம்மா கர்நாடகாவுல போய் உட்கார்ந்திரும். அந்தம்மா திரும்பவும் ஆட்சிக்கு வர நீங்களே வழி வகுக்கலாமா? இது நியாயமா கலைஞரே!
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப் படும்.
-திருக்குறள்
கலைஞரே! போதும் இலவச திட்டம்!
நாட்டுக்குத் தேவை நீண்ட கால திட்டம்!
அது இல்லையேல் தமிழர்கள் சேர்ந்து
கொடுப்பார்கள் உமக்கு திண்டாட்டம்!:-)
படிக்கும் காலங்களில் டி.ராஜேந்தர் படம் பார்த்ததின் பாதிப்பு.
மதம் சம்பந்தமாகவே பதிவுகள் தருகிறீர்களே! நாட்டு நடப்பையும் சேர்த்துக் கொள்ளக்கூடாதா என்று என் நண்பர் கேட்டார். அதன் விளைவு பிறந்தது சமூக அக்கறையுடன் ஒருபதிவு.
0 comments:
Post a Comment