Monday, February 21, 2011

உள்நாட்டு போர் ஏற்படும் - கத்தாஃபி மகன் எச்சரிக்கை

திரிபோலி,பிப்.21:லிபியாவில் ஏகாதிபத்தி ஆட்சிக்கெதிரான மக்கள் எழுச்சி வலுப்பெற்று வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் கத்தாஃபி தலைமையிலான சர்வாதிகார அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளுவதாக செய்திகள் வெளியாகின. இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அரசுத் தொலைக்காட்சி மூலம் பேட்டியளித்த கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாம் கத்தாஃபி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது: 'போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் உள்நாட்டு போரை சந்திக்க வேண்டிவரும். அரசுக்கெதிராக போராட்டம் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும். ராணுவம் எனது தந்தைக்கு(கத்தாஃபி) பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. போர் வாகனங்களையும், ஆயுதங்களையும் பயன்படுத்தி போராட்டத்தை அடக்கி ஒடுக்குவோம். லிபியா எகிப்தோ துனீசியாவோ அல்ல.' என மிரட்டியுள்ள அவர் ராணுவம் சற்றுக் கடுமையை கையாண்டதை ஒப்புக்கொண்டார்.

ஆனால், ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் 14 பேர்தான் மரணித்துள்ளதாகவும், 300 பேர் மரணித்ததாக வெளியான செய்தி அடிப்படையற்றது என தெரிவித்தார்.

நாட்டை பிளவுப்படுத்த இஸ்லாமியவாதிகளும், எதிர்க்கட்சியினரும் முயல்வதாக குற்றஞ்சாட்டிய ஸைஃபுல் இஸ்லாம் வெளிநாட்டு சக்திகள் போராட்டத்தை தீவிரப்படுத்துவதாக கூறினார்.

செய்தி:மாத்யமம்

0 comments:

Post a Comment