Monday, February 21, 2011

நீங்கள் பின்தூங்கி முன் எழுபவர்களா?

லண்டன்:"இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும் என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம். பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது: தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகிய வற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். 

குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடைய வர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர். 

நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்கு வோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது. அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்கு வோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment