Monday, February 14, 2011

பஹ்ரைனில் இன்று அரசுக்கெதிரான பேரணி

மனாமா,பிப்.14:அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராக இன்று பஹ்ரைனில் பேரணி நடத்தப்படும் என ட்விட்டர் சமூக இணையதளத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராக அரபுலக நாடுகளில் நடந்துவரும் எழுச்சிப் போராட்டத்தின் ஒருபகுதியாக பஹ்ரைனிலும் மக்கள் வீதியில் இறங்கிப் போராட தயாராகி வருகின்றனர்.

அமைதியாக நடைபெறவிருக்கும் பேரணியை ராணுவத்தை களமிறக்கி அடக்கி ஒடுக்கிவிட முயலக் கூடாது என பஹ்ரைன் மனித உரிமை மையம், மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கடந்த சில வருடங்களாக நிலவும் சூழலும், போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயன்றால் போராட்டம் தீவிரமடைவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும் பஹ்ரைன் மனித உரிமை மையத்தின் தலைவர் அரசுக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டவர்களை விடுதலைச் செய்யவேண்டும், எல்லா பிரிவினருக்கு அரசு அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கவேண்டும், அதிகாரிகளின் ஊழலை ஒழிக்கவேண்டும், பிரிவினை மனப்பாண்மையை அகற்றவேண்டும் ஆகிய நிபந்தனைகளை அவர் பஹ்ரைன் மன்னருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

போராட்டத்தை வலுவிழக்கச் செய்ய ஏற்கனவே பஹ்ரைன் நாட்டு மன்னர் ஒரு குடும்பத்திற்கு ஆயிரம் திர்ஹம் வீதம் வழங்கப்படும் என அறிவித்த செய்தி வெளியாகியிருந்தது.

தேஜஸ் மலையாள நாளிதழ்

0 comments:

Post a Comment