Monday, February 21, 2011

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்

டெல்லி: மிக பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

இந்த ஆண்டில் முதலாவது கூட்டத்தொடர் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உரையாற்றுவார்.

இந்தக் கூட்டத்தொடர் மார்ச் 16ம் தேதிவரை, ஒரு பகுதியாகவும், ஏப்ரல் 4ம் தேதி முதல் 21ம் தேதிவரை இரண்டாவது பகுதியாகவும் நடைபெறுகிறது.

வழக்கமாக பட்ஜெட் கூட்டத்தொடர் நீண்ட நாட்கள் நடைபெறும். ஆனால், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸா மாநில சட்டசபை தேர்தல்கள் நெருங்குவதால், பட்ஜெட் கூட்டத் தொடரின் நாட்கள் சுருக்கப்பட்டு விட்டது.

வரும் 25ம் தேதி 2011-2012ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய அரசில் அவர் தாக்கல் செய்யும் 3வது பட்ஜெட் இது.

அதே நாளில் பொருளாதார ஆய்வு அறிக்கையும் தாக்கல் செய்யப்படும். 28ம் தேதி, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்வார்.

இந்தக் கூட்டத் தொடரில், 31 மசோதாக்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. 3 மசோதாக்கள் புதிதாக தாக்கல் செய்யப்படுகின்றன. பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, நில ஆர்ஜித திருத்த மசோதா, தேசிய உயர்கல்வி ஆராய்ச்சி கவுன்சில் மசோதா, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் மசோதா, மத கலவர தடுப்பு மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, கம்பெனிகள் திருத்த மசோதா ஆகியவை முக்கியமான மசோதாக்கள் ஆகும்.

பெண்கள் மசோதா ராஜ்யசபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட நிலையில், மக்களவையில் தாக்கல் செய்யப்படும்போது கடும் எதிர்ப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரீய ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கூறி வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் கடந்த குளிர்கால கூட்டத்தொடர் முற்றிலும் ஸ்தம்பித்தது. இந்தக் கூட்டத் தொடரிலும் இந்தப் பிரச்சனை வெடிக்கலாம்.

ஸ்பெக்ட்ரம் மட்டுமின்றி காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டுவசதி திட்ட ஊழல், இஸ்ரோ எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டு ஊழல் ஆகிய பிரச்சனைகளும் நாடாளுமன்றத்தை முடக்கலாம் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment