ஏ.ஜி.எம். தெளபீக்
ஈரானை எண்ணி இரண்டு வகையினர் பயப்படுவது போலுள்ளது. மேற்குலகமும் அமெரிக்காவும் முதலாவது வகையினர். ஈரானை நேசிப்போர் அதன் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளில் அக்கறை கொண்டுள்ளோர் இரண்டாம் வகையினர். மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள அமெரிக்காவுக்கு பிடிக்காத நாடுகளில் எஞ்சியுள்ளது ஈரான் மாத்திரமே. இதற்கு முன்னர் ஈராக்கும் இந்தப் பட்டியலில் இருந்தது. 2003 ஆம் ஆண்டு படையோடும் போர் முரசோடும் ஈராக்கிற்குள் நுழைந்த அமெரிக்கா தனக்குப் பிடிக்காத சதாம் ஹ¤ஸைனை சிம்மாசனத்திலிருந்து தூக்கி வீசும்வரை குண்டுகளைக் கொட்டியும் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தும் துவம்சம் செய்தது. இந்தப் பெரும் போரில் கல்லறைகளுக்குப்போனோர் ஏராளம் ஊனமுற்று கட்டில்களில் கிடப்போர் எம்மாத்திரம் இவைகளைக் கணக்கிடவோ கருத்திலெடுக்கவோ இப்போது நேரமில்லை. 2007 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹ¤ஸைன் தூக்கிலிடப்பட்ட பின்னர்தான் அமெரிக்காவின் கோபாவேஷம் குறைந்தது.
நாசகார ஆயுதங்களை வைத்துக் கொண்டு சதாம் ஹ¤ஸைன் அயல் நாடுகளையும் இஸ்ரேலையும் அச்சுறுத்துகின்றார். மத்திய கிழக்கில் எஜமான்கோலம் பூண்டு அடாவடித்தனம் புரிகின்றார் என்ற காரணத்தைக் காட்டியே அன்று ஈராக் தாக்கப்பட்டது. சுமார் ஜம்பதாயிரம் ஈராக்கியப் பெண்கள் பாலியல் சேஷ்டைக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக லண்டனை மையமாகக் கொண்ட அமைப்பொன்று அறிக்கையொன்றையும் அண்மையில் வெளியிட்டுள்ளமையும் ஈராக்கில் இதுவரை காலமும் புரட்டப்படாத பக்கங்களில் ஒன்று. இதுபோன்ற இன்னும் எத்தனை பக்கங்கள் புரட்டப்படாமலுள்ளதோ தெரியாது. இப்போது ஈரானைப் பற்றிப் பயப்படுவோரின் முதலாம் வகையினரைப் பார்ப்போம். பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், அமெரிக்கா, இஸ்ரேல் என்பவையே இவற்றில் பிரதானமானவை. யுரேனியத்தை செறிவூட்டி ஈரான் அணு ஆயுதம் செய்கின்றதாம் இவ்வாறு ஈரானிடம் அணு ஆயுதமிருப்பது ஏனைய நாடுகளின் இருப்புக்கு ஆபத்தாம். எனவே இவ்வாறான யுரேனியம் செறிவூட்டல் அணு ஆயுதம் தயாரித்தல் போன்ற வேலைகளை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டுமாம். இல்லாவிட்டால் அடுத்த அடியும், உதையும் ஈரானுக்கே என்கின்றன மேற்குலக நாடுகள். ஐ. நா. விடம் இது தொடர்பான இறுக்கமானதும் கடைசியானதுமான அறிக்கைகளை அமெரிக்கா கொண்டு போய் கொடுத்தும் விட்டது. பிரிட்டனும் பிரான்ஸ¤ம் வழமைபோல தலையாட்டிவிட்டது.
இதை எதனையும் ஈரான் கண்டுகொள்ளவில்லை. வழமையான பாணியில் பதில் சொல்லிவிட்டது. மின்சாரம் பெறுவதற்கான நோக்கிலேதான் யுரேனியம் செறிவூட்டப்படுகின்றது. மற்றப்படிக்கு அணுவும் இல்லை, ஆயுதமும் இல்லையென்கிறது ஈரான். அப்படியிருந்தாலும் அவை வேறு நாடுகளுக்கெதிராகப் பாவிக்கப்பட மாட்டாது. இஸ்ரேல் அணு ஆயதம் வைத்திருக்கின்ற போது எங்களிடமிருந்தால் என்ன என்று மறுகேள்வி கேட்கின்றது ஈரான். இது நெடிய கதையும் சுவாரஸ்யமானவொன்றும். சுப்பர் பெற்றோலை எண்பது வீதமளவில் செறிவூட்டி யுரேனியம், புளூட்டோனியம் இன்னும் இதர கலவைகளைச் சேர்த்தே அணு ஆயுதம் செய்யப்படுகின்றது. இன்று நேற்று வந்த முரண்பாடுகளல்ல இவை. நீண்ட காலந்தொட்டு அடிக்கடி வந்து போகும் பூகம்பமே இப்பிரச்சி னை. நான்கு தடவைகள் ஈரானுக்கெதிராக தடைகள் கொண்டு வருமளவிற்கு மிகவும் பாரதூரமாகிப் போன சர்ச்சை.
2010 ஆம் ஆண்டு கடைசியாக நான்காவது தடை ஈரான் மீது ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டும் முரண்பாடுகள் முடியவில்லை. ’நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா’ என்ற பாடலுக்கேற்றாற் போல கதை வசனம் கொண்ட விடயமிது. பொருளாதாரத் தடை, இராணுவத்தடை, இராஜதந்திர ரீதியான தடை, போக்குவரத்துத் தடை, எனப்பல வகையில் ஈரானுக்கெதிரான தடைகள் அமுலாக்கப்பட்டும் ஈரானை வழிக்குக்கொண்டு வரும் விடயத்தில் மேற்குலகம் தொடர்ந்தும் தோல்வியடைந்ததே கதை. ஈரானின் வெளிநாட்டுச் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கடற்பரப்பில் செல்லும் ஈரானின் எல்லா வகையான கப்பல்களும் தேவையான நேரத்தில் தேவையான நாடுகள் சோதனையிடவும் தடுத்து வைக்கவும் ஐ.நா. அங்கீகாரமளித்துள்ளது. பிற நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்களில் ஈரான் ஈடுபடமுடியாது. எனினும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஈரானுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றன. இவ்வளவு கடுமையான தடைகளையும் தாண்டி ஈரான் தன்பாட்டில் போய்க் கொண்டிருப்பதும் வளர்ந்து செல்வதும் மேற்குலகையும் அமெரிக்காவையும் வியக்க வைத்திருக்கும். என்ன செய்ய நிலைமையை தொடரவிட்டால் விளைவுகள் தங்கள் தோழையும் தலையையும் நோக்கி வருமென்பதே அமெரிக்காவுக்குள்ள பிரச்சினை. ஈரானில் அடிக்கடி விமானங்கள் விபத்துக்குள்ளாவதற்கான காரணங்கள் அண்மைய ஆய்வொன்றின்படி கண்டு பிடிக்கப்பட்டது. தரமான உதிரிப்பாகங்களால் விமானம் செய்யப்படவில்லை. உள்ளூரில் செய்யப்பட்ட மூலப் பொருட்களிலிருந்தே ஈரான் விமானங்கள் செய்யப்படுகின்றன. இவை தரமானதாக கெட்டியானதாக இல்லை என்பதே அந்த ஆய்வின் முடிவு. வெளிநாடுகளிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய ஐ.நா. வின் தடைப் பிரகாரம் அனுமதியில்லை. எனவேதான் உள்ளூர் உதிரிப்பாகங்களால் விமானங்கள் செய்யப்படுகின்றன எனவே பொருளாதாரத் தடைகளால் ஈரான் பாதிக்கப்பட்டு வருகின்றமையும் தெரிகின்றது. இதனால்தான் என்னவோ யுரேனியம் செறிவூட்டலை வெளிநாடுகள் கண்காணிக்க வேண்டுமென்ற நிபந்தனையை ஈரான் முன்னர் ஏற்றிருந்தது.
பிரான்ஸ் ரஷ்யாவுக்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் அனுப்ப வேண்டும். அதனை பரீட்சித்து பின்னர் ஈரானுக்கு அனுப்பப்படும் என்பதே ஐ. நா. வின் நிபந்தனை. இதை மறுத்த ஈரான் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தேவையேற்படின் மேற்கு நாடுகள் தனது நாட்டுக்குள் பார்வையிடலாமே என்றது. இதை ஐ.நா. ஏற்றுக் கொள்ளவில்லை. இவ்வாறான இழுபறிகளும் ஏட்டிக்குப் போட்டியும் இன்றைக்கு ஈரானை தர்மசங்கடத்தில் மாட்டிவிடுமோ என்ற பயம் ஈரானை நேசிப்போரிடமுள்ளது. என்னவென்றாலும் சியோனிஷ ஏகாதிபத்திய வாதிகளின் மிரட்டல்களுக்குப் பணிய மாட்டோம் என இராணுவ கல்லூரியில் உரையாற்றிய ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமய்னி சூளுரைத்துள்ளார். ரஷ்யாவும், சீனாவும் ஈரானுக்கெதிரான இராணுவ நடவடிக்கைகள் அவ்வளவு பொருத்தமானதல்ல பேச்சுவார்த்தைகளே இரண்டு தரப்பாருக்கும் ஏற்றமானதென்கின்றன. ஈராக்கின் நிலைமைகள் அயல்நாடான ஈரானுக்கே சாதகமாய் அமைய வாய்ப்புள்ளதென்கின்றனர் அவதானிகள். இன்னும் சவூதி அரேபியாவையும் ஈரானையும் மூட்டிவிட அமெரிக்கா மேற்கொண்ட பிரயத்தனங்கள் பொய்யாகிவிட்டன. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொஹமட் நயிப் ஈரானை நண்பன் எனக் கூறியுள்ளதுடன் வோஷிங்டனிலுள்ள சவூதி தூதுவரை ஈரான் கொலைசெய்ய முயன்றமைக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்பதால் இக்குற்றச்சாட்டை நம்பமுடியாதென்று தெட்டத்தெளிவாக கூறிவிட்டார். இந்நிலைமைகள் அமெரிக்காவின் ஈரான் மீதான தாக்குதல் முயற்சியை கடுமையாக பாதிக்கலாம். மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்கள் உள்ள நாடுகளில் சவூதியும் ஒன்று. ஏனைய நாடுகளான பஹ்ரைன், குவைத், கட்டார், ஓமான், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் என்பன சவூதி அரேபியாவையே பின்பற்றும்.
இவ்வாறான நிலைமைகள் எழுந்தால் அமெரிக்கா மேற்குலகம் என்பன கடுமையாகத் திண்டாட வேண்டி ஏற்படும். இன்னும் முழு மத்திய கிழக்கின் வீச்செல்லைகளையும் தாக்குமளவிற்கு திறனுடைய ஏவுகணைகள் ஈரானிடமுள்ளன. ஒருவாறு போர் மூண்டால் அமெரிக்காவை ஆதரிக்கின்ற அனைத்து அரபு நாடுகளையும் ஈரான் தாக்கவும் கூடும். இதனாலேயே மத்திய கிழக்கிற்கு வெளியே பாரிய இராணுவத் தளத்தை கடலில் அமைக்க அமெரிக்கா யோசனை செய்வதாகவும் ஒரு கதை பேசப்படுகின்றது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்காவின் அணுகு முறைகளிலே தான் முரண்பாடுகள் வேரூன்றுகின்றன. எவவ்ளவுதான் விட்டுக் கொடுப்புடன் நடந்தாலும் நல்ல நோக்கத்தில் அமெரிக்கா எங்களைப் பார்ப்பதில்லையென ஈரான் ஜனாதிபதி அஹ்மெதி நெஜாத் தெரிவித்துள்ளார். இப்போது இரண்டு வகையானோர் உள்ளங்களில் விபரீதமான எண்ணங்கள் இழையோடிக் கொண்டிருக்கும். அமெரிக்கா தோற்க வேண்டுமென்று சிலரும் ஈரான் தோற்க வேண்டுமென்று சிலரும் ஆசைப்பட்டுக் கொண்டிருப்பர். இவையிரண்டிலுமில்லாத மூன்றாம் வகையினரும் உலகில் இருக்கவே செய்வர் அவர்கள் என்றைக்கும் போரையும் அழிவையும் விரும்பாதவர்களாவர். என்னமோ’ உலகம் சமநிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும். நிறைவே காணும் மனம் வேண்டும் இறைவா அதை நீ தர வேண்டும்.
sourse- yarlmuslim blog
0 comments:
Post a Comment