Wednesday, November 9, 2011

இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் - ஈரான் ஜனாதிபதி அஹ்மதிநெஜாட் கூறுகிறார்.


அணு ஆயுதத் தயாரிப்புக்கான முக்கிய தொழில்நுட்பங்களை, ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் விஞ்ஞானிகளிடம் இருந்து ஈரான் பெற்றுள்ளது. இதன் மூலம் அது எந்நேரமும் அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடும் தருணத்தில் உள்ளது. இந்நிலையில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை அந்த மண்டலத்தை பெரும் அபாயத்திற்குள்ளாக்கும் என, பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பரபரப்புத் தகவல்கள்: ஈரானின் ரகசிய அணு ஆயுதத் தயாரிப்பு குறித்த அறிக்கையை, ஐ.நா.,வின் சர்வதேச அணுசக்தி ஏஜன்சி (ஐ.ஏ.இ.ஏ.,) இன்று அல்லது இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிட உள்ளது. இந்நிலையில், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில தகவல்களை, அமெரிக்காவில் இருந்து வெளிவரும், "வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய, பாக்., விஞ்ஞானிகள்: இதுகுறித்து அப்பத்திரிகையில் கூறப்பட்டிருப்பதாவது: அணு ஆயுதத் தயாரிப்புக்குத் தேவையான முக்கிய தொழில்நுட்பங்களை, ரஷ்யாவின் வியாச்செஸ்லாவ் டானிலென்கோ என்ற விஞ்ஞானியும், பாகிஸ்தானின் அப்துல் காதிர் கானும் அளித்துள்ளனர்.

ஆர் 265 ஜெனரேட்டர்:அணு ஆயுதத் தயாரிப்புக்கு, செறிவூட்டப்பட்ட யுரேனியம் அல்லது புளுட்டோனியம் தேவை. ஆர் 265 ஜெனரேட்டர் என்ற கருவியில் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வைத்து நிகழ்த்தப்படும் செயல் முறையின் மூலம் அணுத்தொடர் விளைவு உருவாகும். இதில் இருந்து பெறப்படும் சக்தி மூலம், அணுகுண்டுகளைத் தயாரிக்க முடியும். ஆர் 265 ஜெனரேட்டர் தயாரிப்பு என்பது மிகக் கடினமான ரகசியமான தொழில்நுட்பம் கொண்டது.

ஐந்தாண்டுகள்: ரஷ்ய விஞ்ஞானி டானிலென்கோ 1990களில், ஈரான் விஞ்ஞானிகளுக்கு ஆர் 265ஐ தயாரிப்பது குறித்த தகவல்கள், ஆராய்ச்சிகளை அளித்துள்ளார். அவர் ஐந்தாண்டுகள் ஈரானில் இருந்து அவர்களுக்கு கற்பித்துள்ளார்.

ஆதாரம் இல்லை: இதுகுறித்து ஐ.ஏ.இ.ஏ., பிரதிநிதிகள் டானிலென்கோவிடம் நடத்திய விசாரணையில், அவர் மின்சாரத் தயாரிப்புக்குத் தேவையான அளவிற்கு மட்டுமே அத்தொழில்நுட்பத்தை ஈரான் விஞ்ஞானிகளுக்கு கற்பித்ததாகத் தெரிவித்துள்ளார். ஈரானில் டானிலென்கோவின் நடவடிக்கைகள் குறித்த எவ்வித ஆதாரங்களும் ரஷ்யாவிடம் இல்லை.

வடகொரியா உதவி: சில வடிவமைப்பு வேலைகளுக்கான கணித சூத்திரங்கள், குறியீடுகள், வடகொரியாவில் இருந்து ஈரானுக்கு கிடைத்துள்ளன. கூடுதல் உதவிகள், பாகிஸ்தானின் அப்துல் காதிர் கானிடம் இருந்து ஈரான் விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு அந்தப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் எதிர்ப்பு: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை குறித்து, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் அலய்ன் ஷூப்பே கூறியதாவது: ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை, அந்த மண்டலத்தையே பெரும் அபாயத்திற்குள்ளாக்கும். ஒருவேளை, ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பு, ராணுவ குறிக்கோளுடன் இருக்குமானால், ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க முடியாது.

நிலவரம் மோசமில்லை: எனினும், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கையை எவ்வகையிலாவது தவிர்க்க வேண்டும். இல்லையெனில், அந்தத் தாக்குதல் அந்த மண்டலத்தையே ஒட்டுமொத்தமாக சீர்குலைத்து விடும். இஸ்ரேல் முதலில் தாக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடவில்லை.இவ்வாறு ஷூப்பே தெரிவித்தார்.

ஐ.நா., தடைக்கு ஆதரவு கிடைக்குமா? ஐ.ஏ.இ.ஏ., அறிக்கை வெளியான பின், ஈரான் மீது ஐ.நா., பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வருமானால், பாதுகாப்புக் கவுன்சில் இடம் பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்களான ரஷ்யாவும், சீனாவும் தமது, "வீட்டோ' எனப்படும் மறுப்பாணையைப் பயன்படுத்தி தடைத் தீர்மானத்தை தோல்வியுறச் செய்து விடும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. தீர்மானம் தோற்கும் பட்சத்தில், அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் மேலும் பல தடைகளை தன்னிச்சையாக ஈரான் மீது விதிக்கும். அதன் பின் தங்கள் நிலைப்பாட்டுக்கு ஐ.நா.,வை இழுக்கும்.

அகமதிநிஜாத் எச்சரிக்கை ஈரான் மீதான தாக்குதல் குறித்து எகிப்து அரசின் அல் அக்பர் செய்திப் பத்திரிகைக்கு ஈரான் அதிபர் அகமதி நிஜாத் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேலிடம் 300 அணு ஆயுதங்கள் உள்ளன. ஆனால் ஈரான் அமைதியான பணிகளுக்காகத் தான் அணுசக்தி உற்பத்தியில் இறங்க விரும்புகிறது. இந்த மண்டலத்தில் உள்ள நாடுகளிடம் இல்லாத ராணுவ பலம் எங்களிடம் மட்டுமே உள்ளது. ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறோம். அதனால் இஸ்ரேல், மேற்குலகம் குறிப்பாக அமெரிக்காவை எதிர்கொள்ள நாங்கள் தயார். அமெரிக்கா எங்களைக் கண்டு பயப்படுகிறது. எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு அகமதி நிஜாத் தெரிவித்தார்.
THANKS TO YARLMUSLIM BLOGGER.

0 comments:

Post a Comment