Tuesday, November 1, 2011

38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் கஷ்மீர்:பயங்கரவாதத்திற்கு வெட்கம் ஏது?

என்கவுண்டர் கொலைகளை நிகழ்த்தும் அதிகாரிகளுக்கு மரணத் தண்டனையை விதிக்கவேண்டும் என அண்மையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியிருந்தது.

பாலியல் வன்புணர்வு கொலையை விட கொடிய குற்றம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. கொலை ஒரு மனிதனை ஒருமுறை மட்டுமே கொலைச் செய்யும், ஆனால் பாலியல் வன்புணர்வு பாதிக்கப்பட்டவரை பல முறை கொலைச் செய்கிறது. சட்டத்தின் அடிப்படையிலோ, மனித நேயத்தின் அடிப்படையிலோ முற்றிலும் ஒப்புக்கொள்ளவியலாத இத்தகைய கொடூர குற்றங்கள் ஜம்மு-கஷ்மீரில் அரசு சட்ட அந்தஸ்துடன் நடத்திவருகிறது. பல ஆய்வுகளும், விசாரணைகளும் இதனை உறுதிச் செய்துள்ளன.

தற்பொழுது ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் மனித உரிமை கமிஷனே கூட்டுப் படுகொலைகளுக்கு ஆதாரங்களுடன் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

கஷ்மீர் மாநிலத்தில் 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்கள் அடக்க செய்யப்பட்டுள்ளதை மனித உரிமை கமிஷன் கண்டறிந்துள்ளது. இந்திய ராணுவம் கடுமையான மனித உரிமை மீறல்களை புரிந்துவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணை அரசு அதிகார வர்க்கத்தின் பயங்கரவாத முகத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அநியாயமான படுகொலை, வீணாக கைதுச் செய்வது, எவ்வித காரணமுமின்றி சிறையில் அடைத்தல், சித்திரவதைகள், கொடுமைகள் இவையெல்லாம் கஷ்மீரில் பல வருடங்களாக சர்வ சாதாரணமாக நடந்துவருகிறது. அடையாளம் தெரியாத உடல்களுடன் 2730 பேரை கூட்டமாக புதைத்துள்ளனர் என்பதை மாநில மனித உரிமை கமிஷனின் சிறப்பு புலனாய்வு குழு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

பாரமுல்லா, பந்திபூர், குப்வரா ஆகிய மாவட்டங்களிலிருந்து மட்டும் கிடைத்த புள்ளிவிபரங்கள் தாம் இவை.

மத்திய-மாநில அரசுகள் கஷ்மீருக்கு செய்யும் மிகப்பெரிய துரோகத்தின் சித்திரம்தான் இவை. தீவிரவாதி, பயங்கரவாதி, ஊடுருவல்காரன் எனக்கூறி எவரையும், எப்பொழுதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல்தான் கஷ்மீரில் நிலவுகிறது. இது ஒரு பயங்கரமான சூழலாகும்.

அ.செய்யது அலீ From Thoothu online

0 comments:

Post a Comment