Wednesday, February 20, 2013

பொது வேலை நிறுத்தம் துவங்கியது: 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு!

strike

     புதுடெல்லி:வங்கிகள் தனியார் மயம், விலைவாசி உயர்வு, புதிய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக புதன், வியாழன் (பிப்ரவரி 20, 21) ஆகிய இரு நாள்கள் (48 மணி நேரம்) நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் அழைப்புவிடுத்த  பொது வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியது. இந்தப் போராட்டத்தில் 25கோடி பேர் பங்கேற்பார்கள் என்று  தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

     இன்சூரன்ஸ், வங்கித் துறை, வருமான வரித்துறை, தபால் துறை, கலால், சுங்கம், கப்பல், பாதுகாப்புத் துறை, மத்திய கணக்குத் துறை, தொலைத்தொடர்பு துறை உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன.

     இந்த வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் ஈடுபடக்கூடாது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

     தமிழகத்தில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தைத் தவிர பிற போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அனைத்தும் அகில இந்திய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் அனைத்து பஸ்களும் இயக்குவது கடினம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த பொது வேலைநிறுத்தத்தில் ஆளும் கட்சி தொழிற்சங்கமான -அண்ணா தொழிற்சங்கப் பேரவை- மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் போக்குவரத்துச் சங்க ஒரு பிரிவு, ஐ.என்.டி.யு.சி. ஒரு பிரிவு ஆகியவை தவிர பிற போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அனைத்தும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.

     தமிழகத்தில் 85 ஆயிரம் பஸ் தொழிலாளர்கள் ஸ்டிரைக்: தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்களில் 1.35 லட்சம் நடத்துநர், ஓட்டுநர்கள் பணிபுரிகின்றனர். தொழில்நுட்ப ஊழியர்கள் மட்டும் 10 ஆயிரம் பேர் உள்ளனர். இதில் அண்ணா தொழிற்சங்க பேரவையில் 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களைக் கொண்டு பஸ்களை இயக்கினாலும், மீதமுள்ள 85 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அந்தந்த தொழிற்சங்கங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. அவ்வாறு 85 ஆயிரம் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றால், தமிழகம் முழுவதும் பாதிக்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்காத நிலை உருவாகும்.

     சென்னையைப் பொருத்தவரை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 19,600 ஓட்டுநர், நடத்துநர்கள் உள்ளனர். தொழில்நுட்ப ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதனால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தமுள்ள 3,600 பஸ்களில், 2000 பஸ்கள் அளவுக்கு புதன், வியாழக்கிழமைகளில் இயங்காத நிலை உருவாகும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனால், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் என்று தெரிகிறது.

     நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் சென்னையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் வங்கிப் பணிகள் பாதிக்கும் என்று தெரிகிறது.

      மத்திய அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட வங்கி சீர்த்திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். கிராமப்புற வங்கி கிளைகளை மூடக்கூடாது. தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.

     வேலை நிறுத்தம் காரணமாக மத்திய அரசு அலுவலகப் பணிகள் முடங்கும் ஆபத்து உள்ளது. வங்கிப் பணிகளும், இன்சூரன்ஸ் பணிகளும் கடுமையாகப் பாதிக்கும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட அனைத்து இன்சூரன்ஸ் நிறுவன ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். காசோலை பரிவர்த்தனை, பணப் பட்டுவாடா, இதர வங்கி சேவைகள் பாதிக்கப்படும். இதேபோல தபால் சேவை, தொலைத் தொடர்பு துறை சேவையும் பாதிக்கப்படக்கூடும். சாஸ்திரி பவன், ராஜாஜி பவன் ஊழியர்கள், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள், மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதால் பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

     சென்னையில் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment