Thursday, February 28, 2013

தமிழகத்தை ஆள்வது அரசு துறையா?உளவு துறையா?ஓட்டுப்போட்ட மக்களுக்கு சந்தேகம்- பாப்புலர் ஃப்ரண்ட்

                          

     சமீபத்திய மக்கள் பிரச்சனைகளில் தமிழக அரசின் தலையீடு விஷயத்திலும், அதில் முடிவு எடுக்கப்பட்ட விதத்திலும் ஒரு நல்ல அணுகுமுறையை நாம் பார்க்க நேர்ந்தது. அது, மத உணர்வுகளை காயப்படுத்தும் சினிமா படத்திற்கு எதிரான முடிவானாலும் சரி, விவசாயிகளுக்கான காவிரி நீர் போராட்டத்தின் நிலையானாலும் சரியே.

     ஆனால், இப்படிப்பட்ட அரசின் கொள்கைக்கும் செயலுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தமிழக முதல்வர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இதுவரையிலும் காவல்துறையின் ஒருவிதமான மக்கள் அடக்குமுறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. அது முஸ்லிம்கள், தலித்துகள், மனித உரிமை ஆர்வலர்கள் நடத்தும் போராட்டங்களிலும் நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிக்கின்றது. ஒருவேளை இச்செயல் முதல்வர் அவர்களின் பார்வைக்கு உளவுத்துறையால் சரியான முறையில் கொண்டு செல்லப்பட்டதா அல்லது இவ்விஷயங்கள் என்ன மாதிரியாக உளவுத்துறையால் முதல்வரிடம் தெரியப்படுத்தப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியவில்லை.

ஆள்வது யார் என மக்கள் குழப்பம்


     “அ.தி.மு.க.விற்குத் தானே ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்தோம்; ஆனால் நாம் ஓட்டுப் போடாத காவல்துறை உளவுத்துறையல்லவா தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கிறது” என மக்கள் குழம்பிப் போய் நிற்கிறார்கள். பரமக்குடி, கூடங்குளம், தர்மபுரி, பெரம்பலூர், சென்னை என விதவிதமான வடிவங்களில் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அணுதினமும் காவல்துறையால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் அராஜகங்களே இதற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கின்றன.

சுதந்திரதின அணிவகுப்பிற்கு தடை

     முஸ்லிம்களின் சுதந்திரதின போராட்ட தியாகங்களை நினைவு கூறும் விதத்திலும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட அனைத்து சமூக தியாகிகளை கௌரவிக்கும் விதத்திலும் கடந்த 2008ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை முஸ்லிம் சமூகத்தின் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தின அணிவகுப்பை நடத்தி வந்தது. அ.தி.மு.க தலைமையில் புதிய அரசு அமைந்தவுடன் கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய 2 வருடங்களாக தமிழக அரசின் காவல்துறை முஸ்லிம்களின் சுதந்திரதிக் அணிவகுப்பிற்கு தடை விதித்தது.

     ஆகஸ்ட் 15 அன்று அனுமதி வழங்கப்படாததால், 2011ம் ஆண்டு ஜனவரி 26 குடியரசு தினத்தன்றாவது அணிவகுப்பு நடத்த அனுமதி தாருங்கள் எனக் கேட்டோம். காவல்துறை அதற்கும் அனுமதி மறுத்துவிட்டது. அனுமதி மறுத்ததோடல்லாமல் காவல்துறையின் ஆலோசனைப்படி அரசு அவசரமாக ஒரு சட்டமும் இயற்றியது. அதில் “இராணுவம் போன்றோ, போலீஸ் போன்றோ தோற்றமளிக்கும் யூனிஃபார்ம் போட்டு அணிவகுப்பு நடத்தக்கூடாது. கையில் கம்பு (லத்தி) வைத்திருக்கக்கூடாது. அணிவகுப்பிற்கான பயிற்சி எடுக்கக்கூடாது. ஒரு சில அமைப்புகள் அணிவகுப்பு நடத்த முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது. ஆகவேதான் இந்த அவசர சட்டம்” என தமிழ்நாடு மாநகர காவல் சட்டம் பிரிவு 41 ஐ திருத்தி அவசர சட்டம் பிறப்பித்து, கவர்னர் உத்தரவுடன் உடனடியாக அமலுக்கு கொண்டுவந்தது.
காவல்துறையின் அத்துமீறல்கள்
     இதுபோன்ற ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் செயல் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கும் எதிர்கட்சிகளுக்கும் கூட கடந்த 2 வருடங்களாக தமிழகத்தில் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினரால் இழைக்கப்பட்டு வருகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

     முன்னாள் துணை முதல்வர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு. ‘ம்’ என்றால் வனவாசம்; ‘ஏன்’ என்றால் சிறைவாசம் என்று கூறுவது போல் பொய் வழக்குகளுக்கும் பஞ்சமில்லை.

     பரமக்குடியிலே காக்கை, குருவிகளை சுடுவதை போன்று தலித் சமூக மக்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. * காவல்துறையினருக்கு பாதிப்பு என்ற காரணத்தை முன்வைத்து நடத்தப்படும் போலி என்கவுண்டர்கள் தொடர் கதையாகி வருகின்றன.

     அதேபோன்று கூடங்குளத்திலே பேரழிவுக் காரணியான அணுஉலையை மூடக்கோரி இடிந்தகரை மக்கள் ஜனநாயக வழியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக செய்து வரும் அறவழிப் போராட்டத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது.

     அமைதியாகப் போராடிய இடிந்தகரை கிராம பெண்கள், குழந்தைகள் மீது மிருகத்தனமாக தடியடி நடத்தி இரத்தக்களரியாக்கியது. * சென்னையில் அறவழியில் காவல்நிலைய முற்றுகை நடத்திய முஸ்லிம் பெண்கள் மீது தடியடி நடத்தியது.

     தர்மபுரியில் ஆதிக்க சாதியினரின் தாக்குதலால் உருக்குலைந்த தலித் சமூக மக்கள் மீது அடக்குமுறையை ஏவியது.

     பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சங்பரிவார்களின் ஊர்வலங்களை அனுமதிப்பது. அவ்வாறு ஏன் அனுமதிக்கிறீர்கள் என கேட்ட முஸ்லிம்கள் மீது அண்மையில் மாணவர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மீது குற்றவழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தது என தொடர்கின்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் தினம்
     பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்கப்பட்ட தினமான பிப்ரவரி 17ம் நாள் “மக்கள் உரிமைக்காக ஒன்றிணைவோம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி காஞ்சிபுரம், திருச்சி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானித்திருந்தோம். இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கேட்டு மனு அளித்திருந்தோம். ஆனால், காஞ்சிபுரம், திருச்சி ஆகிய இடங்களில் காவல்துறையினர் மற்றும் உளவுத்துறையினர் பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என வேண்டுமென்றே கடைசிவரை அலைக்கழித்து விட்டு, பிப்ரவரி 17 அன்று பேரணி துவங்குவதற்கு 2 மணி நேரம் முன்பு வாய்மொழியாக அனுமதி அளித்தனர். அதுமட்டுமல்லாது எல்லாவிதமான அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டனர் இந்த காவல்துறையினரும் உளவுத்துறையினரும்.

    வெளியூர்களில் இருந்து வந்த வாகனங்களை வந்து சேரவிடாமல் தடுக்கும் நோக்கில் சோதனை என்ற பெயரில் திருச்சி நகருக்கு வெளியே 3 இடங்களில் செக்போஸ்ட் அமைத்து இடையூறு செய்தனர் திருச்சி காவல்துறையினர்.

     ஒவ்வொரு செக் போஸ்டிலும் இந்த வண்டிகளை நிறுத்தி டிரைவரை வீடியோ எடுத்து, வண்டியை வீடியோ எடுத்து மிரட்டும் சோதனையில் டிரைவரின் முழு விபரங்களையும் வாங்கி, வாகன பொறுப்பாளரின் விபரங்களை வாங்கினர்.

    பேரணி துவங்கும் இடத்திற்கு 2 கி.மீ. முன்பே வாகனங்களை நிறுத்தி அனைவரையும் இறங்கி நடந்து போகுமாறு செய்தனர்.

     பொது இடங்களில் கட்டப்பட்டிருந்த பாப்புலர் ஃப்ரண்டின் ஃப்ளக்ஸ் பேனர்களை மட்டும் காவல்துறையினரே கிழித்து எறிந்தனர். அதன் அருகில் உள்ள மற்ற கட்சி பேனர்கள் அப்படியே இருந்தன.

     முஸ்லிம்களின் முஹல்லாக்களுக்கு டீம் டீமாக சென்ற காவல்படை பேரணிக்கு செல்லக்கூடாது என பொதுமக்களை மிரட்டினர்.

     பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களுடைய வீடுகளுக்குச் சென்று குற்றவாளிகளின் விபரங்களை சேகரிப்பது போல் அனைத்து விபரங்களையும் சேகரித்தனர்.

     பெண்கள் மட்டும் வீட்டில் தனியாக இருக்கும் போது, ஆண் காவலர்கள் நடுவீட்டிற்குள் சென்று பெண்களை மிரட்டியுள்ளனர்.

     திருச்சியில் மக்களை பேரணிக்கு ஏற்றி வருவதற்காக ஏற்பாடு செய்த வாகன நிறுவனங்களுக்கு சென்று, உரிமையாளர்களை மிரட்டியுள்ளனர்.

     மெகா போன் மூலம் அறிவிப்பு செய்வதற்கும், கொடி, தோரணம் கட்டுவதற்கும் அனுமதி வாங்கித்தான் கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். * பேரணி, பொதுக்கூட்டம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளை வலுக்கட்டாயமாக அடைக்கச் சொல்லி காவல்துறையினர் மிரட்டி கடைகளை பூட்ட வைத்தனர்.

     பேரணிக்கு ஒரு நாள் முன்னதாகவும், பேரணி தினத்தன்றும் காலை, மாலை செய்தித்தாள்களில் “பேரணிக்குத் தடை போலீஸ் குவிப்பு” என்ற செய்தி வெளியிட வைத்து பொதுமக்களை பீதி வயப்படுத்தினர்.

     பேரணிக்கு முன்னதாக மிகப்பெரிய போலீஸ் படையை அணிவகுக்கச் செய்து பீதியை ஏற்படுத்தினர். இப்படி திருச்சி காவல்துறையின் அட்டூழியங்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகமுடியும். பேரணியை சீர்குலைக்க சென்னை மாநகர உயர்மட்ட காவல்துறையினரும் உளவுத்துறையினரும் இதற்கு தாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்ற அளவில் தங்களால் இயன்ற எல்லா அத்துமீறல்களையும் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக நாடு

     நமது இந்திய தேசம் சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு ஜனநாயக நாடு. எல்லோருக்கும் தமது கொள்கையை பிரச்சாரம் செய்வதற்கும், அரசின் கொள்கைகளை எதிர்த்து அறவழியில் போராடுவதற்கும் உரிமை உண்டு. இது இந்தியாவின் மிக உயர்ந்த உன்னதமான சட்டமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கும் ஜனநாயக உரிமையாகும். இதனை யாரும் மறுக்க முடியாது.

நாடு காவல்துறைக்குச் சொந்தமானது அல்ல!

     பொதுமக்கள் மிகவும் கண்ணியத்துடன் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்கிறார்கள். ஆனால், அரசும் காவல்துறையும் அவற்றை மிகவும் மோசமாக அணுகி வருகின்றன. குடிமக்களின் உரிமைகளை சட்டம் தீர்மானிக்க வேண்டும்; மாறாக, அடக்குமுறையும் சர்வாதிகாரமும் தீர்மானிக்கக்கூடாது.

     இந்த நாடு மக்களுக்குச் சொந்தமானது; காவல்துறைக்குச் சொந்தமானது அல்ல. குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத்தான் காவல்துறையே அல்லாது, அடக்கி ஆளுவதற்காக அல்ல. மக்களை தொடர்ந்து விளிம்பு நிலையிலேயே வாழவைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததல்ல என்பதை அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும். சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு மக்களின் நியாயமான உரிமைகளையும் உணர்வுகளையும் மதித்து நடக்க வேண்டியது அரசு மற்றும் காவல்துறையின் கடமையாகும். ஜனநாயக உரிமைகளை அடக்குமுறைகளாலும் சர்வாதிகாரத்தாலும் நீண்ட காலத்திற்கு தடைபோட்டு வைக்க முடியாது என்பதை அரசும் காவல்துறையினரும் உணர வேண்டும்.

விழித்தெழும் நேரமிது!

    ஆகவே, ஜனநாயகத்தின் ஒழுக்க விழுமியங்களைப் பாதுகாக்க, நமது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட காவல்துறை, உளவுத்துறை மற்றும் அரசின் அடக்குமுறைக்கெதிராகவும் சர்வாதிகாரத்திற்கெதிராகவும் மக்கள் விழித்தெழுந்து வீரியமிக்க ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தருணமிது. மக்களின் உரிமைகளை மக்கள் தான் கண்காணிக்க வேண்டும். நாம் கண்காணிப்பில் கவனமற்று இருந்தால் பருந்துகளும் வல்லூறுகளும் கூட நமது உரிமைகளை கொத்தி சென்று விடும் என்பதை நாம் மறந்து விட வேண்டாம். நமது உரிமைகளுக்கு பங்கம் ஏற்படும்பொழுது ஆர்த்தெழுந்து உரிமையை நிலை நாட்ட போராட வேண்டும்.

    மக்கள் சக்திக்கு முன்பு எந்த ஒரு அடக்குமுறையும் நிற்க முடியாது என்பதை உலக சரித்திரம் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.

     மக்களே, அணி திரளுங்கள்! அடக்குமுறையற்ற ஜனநாயகம் படைத்திடுவோம்!!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

#184/229, 2வது மாடி, லிங்கி செட்டி தெரு, மண்ணடி, சென்னை 600 001, போன்: 044 64611961

0 comments:

Post a Comment