13 Feb 2013
புதுடெல்லி:இந்தியாவுடனான பாதுகாப்பு பேரம் தொடர்பாக ரூ.360 கோடி லஞ்சம் வழங்கியதாக இத்தாலி அரசு நிறுவனத் தலைவர் கியூசெப் ஒர்சியை அந்நாட்டு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். வி.வி.ஐ.பிக்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டர் கிடைப்பதற்காக 362 கோடி ரூபாய் இந்தியாவில் லஞ்சமாக அளிக்கப்பட்டதாக வழக்கு.
இதனிடையே இந்த விவகாரம் குறித்து முழுமையாக அறிய, சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ராணுவ தளவாடம் மற்றும் போர் விமான தயாரிப்பு நிறுவனமான ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் இந்திய பாதுகாப்புத் துறையுடன் கடந்த 2010ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.
இந்த ஒப்பந்தம், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்கான 12 ஹெலிகாப்டர்களை (ஏ.டபிள்யூ 101 ரகம்)
இந்தியாவுக்கு வழங்க வகை செய்கிறது.
இதில் 3 ஹெலிகாப்டர்கள் ஏற்கெனவே இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள ஹெலிகாப்டர்கள் அடுத்த ஆண்டு மத்தியில் சப்ளை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ளவர்களுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக ஓராண்டுக்கு முன்பு புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து இதுகுறித்து இத்தாலி அரசு விசாரணை நடத்தி வருகிறது.
ஃபின்மெக்கனிகா நிறுவனத்தின் தலைவர் கியூசெப் ஒர்சியிடம் கடந்த ஒரு மாதமாக விசாரணை நடைபெற்றது. அவர் எந்த முறைகேடும் செய்யவில்லை என கூறி வந்தார். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் ஒர்சியை இத்தாலி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். மேலும், ஃபின்மெக்கனிகாவின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட் தலைவர் புருனோ ஸ்பக்னொலினியை வீட்டுக் காவலில் வைக்குமாறும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள ஒர்சிக்கு உறுதுணையாக இருப்போம் என ஃபின்மெக்கனிகா நிறுவனம் கூறியுள்ளது. நிறுவனம் தொடர்ந்து வழக்கம் போல செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் ஒப்பந்த விவகாரத்தில் ஃபின்மெக்கனிகா நிறுவன தலைவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “இந்த ஒப்பந்தம் தொடர்பாக புகார் எழுந்தபோது, இதுதொடர்பான விவரங்களைத் தெரிவிக்குமாறு இத்தாலி அரசைக் கேட்டுக் கொண்டோம். ஆனால் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனவே, இந்த ஒப்பந்தம் குறித்து விசாரிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மொத்த ஆர்டரில் மீதம் உள்ள 9 ஹெலிகாப்டர்களைப் பெற்றுக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.
இத்தாலி நிறுவனத்துடனான இந்த ஒப்பந்தத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்த மத்திய நிதியமைச்சகம், பின்னர் ஏற்றுக் கொண்டது. இதையடுத்து, பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு 2010ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தது.
“தற்போதைய நிலைமைக்கேற்ப பாதுகாப்பை அதிகரிக்க நவீன ஹெலிகாப்டர்கள் அவசியம் என இந்திய விமானப்படை தொடர்ந்து கோரி வந்தது. இதையடுத்து, முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிதியமைச்சகம் பின்னர் ஏற்றுக் கொண்டது.” என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி ஏற்கெனவே கூறியிருந்தார்.
0 comments:
Post a Comment