Friday, February 15, 2013

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சிக்கியுள்ள தியாகிக்கு பா.ஜ.க ஆதரவு!

jaswanth singh
புதுடெல்லி:இத்தாலி நாட்டு நிறுவனத்துடன் நடந்த ஹெலிகாப்டர் பேர ஊழலில் பெயர் அடிபடும் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி தியாகிக்கு ஆதரவாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கிடைக்கும் வகையில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியின் போது விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டது என்று விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கூறியிருப்பது உண்மைதான் என்றும் ஜஸ்வந்த் சிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஜஸ்வந்த் சிங் கூறியது:”"ரூ. 3,600 கோடி ஹெலிகாப்டர் பேரத்தில் லஞ்சம் தரப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து விரைவான விசாரணை நடத்த வேண்டும். விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி மீது கடுமையான புகார்களை தெரிவிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உண்மை தெரியும் வரை, ஒருவரையொருவர் குற்றம் சாட்டும் வகையில் பேசக்கூடாது. இந்த விவாகரத்தில் குற்றம் புரிந்துள்ளது இத்தாலி நிறுவனம்தான். ஆனால், நாம் அதை மறந்துவிட்டோம்” என்றார்.
18,000 அடி உயரத்தில் பறக்கும் திறனுள்ள ஹெலிகாப்டர் என்ற விதிமுறையை, 15,000 அடியாக மாற்றியதாக இத்தாலிய புலனாய்வு அமைப்பின் அறிக்கையில்,கூறப்படுகிறது. இந்த மாற்றத்தை மேற்கொள்ள அப்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ரா வலியுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜஸ்வந்த் சிங்கிடம் கேட்டபோது, ஹெலிகாப்டர் பறக்கும் உயரத்தின் அளவு 18 ஆயிரம் அடியாக இருந்திருந்தால் ஒரு நிறுவனம் மட்டுமே போட்டியில் பங்கேற்றிருக்க முடியும். அதை 15 ஆயிரம் அடியாகக் குறைத்ததால் மேலும் சில நிறுவனங்கள் போட்டியில் பங்கேற்றன.
அந்த வகையில் தக்க ஆலோசனையை மிஸ்ரா அளித்தார் என்றும் ஜஸ்வந்த் சிங் தெரிவித்தார். அதே வேளையில் இத்தகைய திருத்தத்தை செய்தது அப்போதைய மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டஸா, தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ராவா, விமானப்படை முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகியா என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

0 comments:

Post a Comment