Wednesday, February 27, 2013

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்த இந்தியா பணம் அளிக்கிறது:ஹகெல்! – இந்தியா எதிர்ப்பு!


     வாஷிங்டன்:பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்களை நடத்த இந்தியா பணம் அளிக்கிறது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள சக் ஹகெல்(chuck hagel) கூறியுள்ளார்.

      2011 ஆம் ஆண்டு ஒக்லஹாமா காமரன் பல்கலைக் கழகத்தில் ஹகெல் ஆற்றிய உரையின் வீடியோவை வாஷிங்டன் ஃப்ரீ பியாகன் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரச்சனையை உருவாக்க இந்தியா பல வருடங்களாக ஆப்கானில் பணம் செலவழிக்கிறது என்று ஹகேல் கூறுகிறார்.

     இக்குற்றச்சாட்டுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள இந்திய தூதரகம், ஹகேலின் கூற்று உண்மைக்கு புறம்பானது என்று கூறியுள்ளது. ஆப்கான் மக்களின் அமைதியும், நலனும்தான் இந்தியாவின் நோக்கம். அமெரிக்காவும்(?) இந்தியாவும் இந்த லட்சியத்திற்காகத்தான் செயல்படுகின்றனர். தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை அதிபர் ஒபாமா பல முறை பாராட்டியுள்ளார் என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

     பாரக் ஒபாமாவால் பாதுகாப்பு துறை செயலாளர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் ஹகேல். இவருக்கு எதிராக  குடியரசுக் கட்சிக்கு பெரிய ஆயுதம் கிடைத்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் சிறந்த உறவை பேணுவதாகவும், ஹகேலின் கூற்றின் நோக்கம் என்னவென்று தெரியவில்லை என்றும் குடியரசு கட்சியின் செனட்டர் ஜான் கார்னின் கூறுகிறார்.

     இந்தியன் வம்சா வழியைச் சார்ந்த செனட் உறுப்பினர்களும் ஹகேலின் கூற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கூறிவரும் குற்றச்சாட்டுக்கு ஹகேலின் கூற்று பலம் சேர்த்துள்ளது. பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானில் சில குழுக்களை பயன்படுத்தி பாகிஸ்தானில் பிரச்சனையை உருவாக்க இந்தியா முயலுவதாக பாகிஸ்தான் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தது. ஆனால், அன்று இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்தது.

0 comments:

Post a Comment