Wednesday, February 27, 2013

சேது சமுத்திரம்:தமிழகத்தின் வளர்ச்சியை விரும்பாத பா.ஜ.க, அ.இ.அ.தி.மு.க மாநிலங்களவையில் அமளி!


     புதுடெல்லி:சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தை திரும்பப் பெறக் கோரி மாநிலங்களவையில் மதத்தின் பெயரால் நாட்டின் வளர்ச்சியைக் கெடுக்க நினைக்கும் பாரதிய ஜனதா உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை அமளியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர்கள் கோஷமிட்டபோது திமுக உறுப்பினர் திருச்சி சிவா எதிர்குரல் எழுப்பினார்.

     இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து, மாநிலங்களவை நண்பகலுக்குப் பிறகு பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கேள்வி நேரம் முடிந்ததும் அவையை மூத்த உறுப்பினரான இ.எம்.எஸ். சுதர்சன நாச்சியப்பன் வழிநடத்தினார்.

     அப்போது பாஜக உறுப்பினர் பிரகாஷ் ஜவடேகர் எழுந்து; “ராமர் பாலம் இருப்பதாக இந்துக்கள் கருதும் அதே வழித்தடத்தில் சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான நிலையை விளக்கி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அந்தத் திட்டம் தொடர்பாக ஆர்.கே. பச்சௌரி குழு அளித்த அறிக்கையை நிராகரித்து விட்டு, மத்திய அரசு சேதுத் திட்டத்தை செயல்படுத்த முற்படுவதை அனுமதிக்க மாட்டோம். எனவே, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசுதாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற வேண்டும்.” என்று பேசினார்.

     அவருக்கு ஆதரவாக அதிமுக உறுப்பினர் வா. மைத்ரேயன் தலைமையிலான அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதையடுத்து, சேதுத் திட்டத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என திமுக உறுப்பினர் திருச்சி சிவா குரல் கொடுத்தார். அவையில் இருந்த பாராளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சுக்லாவும் “இந்த விஷயத்தை அரசியலாக்க வேண்டாம்” என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

     ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் ஒருபுறமும், அவர்களுக்கு எதிராக திமுக உறுப்பினர் திருச்சி சிவாவும் குரல் எழுப்பியபடி இருந்தனர்.  இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, அவை நடவடிக்கையை பிற்பகல் 2 மணி வரை சுதர்சன நாச்சியப்பன் ஒத்திவைத்தார்.

0 comments:

Post a Comment