Wednesday, February 27, 2013

முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாதாம்! – மத்திய அரசு!


     புதுடெல்லி:தீவிரவாதிகளாக முத்திரைக் குத்தி ஏராளமான முஸ்லிம் இளைஞர்களை சிறையில் அடைத்தது தெரியாது என்று மத்திய அரசு கூறுகிறது. மத்திய அரசின் நிலைப்பாடு தேசத்திற்கு அவமானம் என்று முஸ்லிம் லீக் எம்.பி இ.டி.முஹம்மது பஷீர் தெரிவித்துள்ளார்.

     நேற்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பசுதேவ் பட்டாச்சார்யா இதுக்குறித்து கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை அமைச்சர் ஆர்.பி.என்.சிங் கூறுகையில், “மத்திய அரசுக்கு இக்காரியம் தெரியாது. உதாரணம் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கவேண்டும்” என்று தெரிவித்தார். இதுபோல ஏராளமானபுகார்கள் கிடைத்துள்ளன என்று பட்டாச்சார்யா பதிலளித்தார். இவ்விவகாரத்தில் தலையிட முஸ்லிம் லீக் எம்.பியான இ.டி.முஹம்மது பஷீர் சபாநாயகருக்கு குறிப்பை வழங்கினார்.

     இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி இதுக்குறித்து கூறியது: “அப்பாவிகளான ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தீவிரவாத முத்திரைக் குத்தப்பட்டு இந்தியாவின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இது தெரியாது என்று மத்திய அரசு கூறுவது தேசத்திற்கே அவமானம். சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்கள் குறித்து ஏராளமான சம்பவங்கள் தெரியும். 20 வயது முதல் 30 வயது வரையிலான ஏராளமான முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய தீவிரமான பிரச்சனையில்பதில் அளித்த அமைச்சரின் அணுகுமுறை என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

     எனது தொகுதியில் கூட ஸக்கரியா என்ற 28 வயது முஸ்லிம் இளைஞரை கர்நாடகா போலீஸ் பிடித்துச் சென்று சிறையில் அடைத்து 4 ஆண்டுகள் ஆகிறது. விசாரணை கைதிகளாக இந்திய சிறைகளில் வாடும் இத்தகைய நபர்களுக்கு 10 ஆண்டுகள் கழிந்த பிறகும் குற்றப்பத்திரிகை கூட அளிக்கப்படவில்லை. நிரபராதிகளின் விவகாரத்தில் அரசு என்னச் செய்யப் போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும்.

     மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு சவால் விடுக்கும் பொடா, தடா போன்ற சட்டங்களில் உள்ள கடுமையான பிரிவுகள் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தில் உள்ளன என்று இ.டி. முஹம்மது பஷீர் எம்.பி கூறினார்.

     இதனைத் தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், “ஆறுமாதத்திற்குள் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்காவிட்டால் ஜாமீன் வழங்க தகுதி உண்டு” என்று தெரிவித்தார்.

0 comments:

Post a Comment