Wednesday, February 27, 2013

புலிகளின் ஆதரவாளர்கள் என சந்தேகிப்பவர்களை பாலியல் வன்கொடுமைச் செய்த இலங்கை ராணுவத்தின் வெறி! – ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் குற்றச்சாட்டு!


கொழும்பு:இலங்கை பாதுகாப்பு படையினர் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களாக சந்தேகிக்கப்பட்டு , போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட பலரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக, சர்வதேச மனித உரிமைக் குழுவான ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் குற்றம் சாட்டியுள்ளது.

     இலங்கை மனித உரிமைகள் குறித்து ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் வெளியிட்டுள்ள கூறியிருப்பது: 2006லிருந்து 2012ம் ஆண்டு வரை, இலங்கை அரசின் சிறைகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறார்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை கிரிமினல் விசாரணைகளை நட்த்தவேண்டும். இலங்கை படையினரால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகள் 2006க்கு பின்னரான கால கட்டத்தில் மிகவும் அதிகரித்தது. இதில் பெரும்பான்மையான வன்முறைகள் அரசியல் ரீதியான நோக்கங்கள் கொண்டவை. இது குறித்து 75 சம்பவங்களை, ஹுயுமன் ரைட்ஸ் வாட்ச் ஆராய்ந்துள்ளது.

    இதில் பாதிக்கப்பட்ட 31 ஆண்கள், 41 பெண்கள் மற்றும் மூன்று சிறார்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணைகள் ஒரு வருட காலகட்டத்தில், ஆஸ்திரேலியா,  இந்தியா, ஜெர்மனி, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் வசிக்கும் பாதிக்கப்பட்ட இந்த நபர்களிடையே நடத்தப்பட்டது.

     பாலியல் வல்லுறவை, இலங்கைப் படையினரும் போலீசாரும், போரின் போதும் போருக்குப் பின்னரும், விடுதலைப்புலிகள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கு ஒரு சட்டவிரோதமான ஆயுதமாகவே பயன்படுத்தினர்.

   இந்த ஆய்வு, அரசாங்க கட்டுப்பாடுகள் காரணமாக, முன்னர் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலையான நபர்களிடையே மட்டுமே நடத்தப்பட்டதாகவும், தற்போதும் அரசின் சிறைகளில் இருப்பவர்களின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகவே இருப்பதாக உள்ளது. இந்தக் குற்றச்செயல்களில் அரச படையினர் மற்றும் போலீசார் தவிர, அரசுக்கு ஆதரவான இணை ராணுவக் குழுக்களும் (ஆயுதக்குழுக்கள்) ஈடுபட்டனர் என்று நேரில் கண்டவர்களின் சாட்சியங்கள் அடிப்படையில் தெரியவருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.

     இந்த எல்லா சம்பவங்களிலும், பாலியல் வன்முறை தவிர, இவர்கள் மற்ற வகை சித்ரவதைகள், மனித கண்ணியத்துக்கு கீழான வகையில் நட்த்தப்படுதல் போன்றவற்றுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அரசு இந்த சம்பவங்கள் குறித்து சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படகூடிய நியாயமான முறையில் விசாரணைகளை நடத்தி, சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கவேண்டும். மேலும், குற்றச்சாட்டுக்கள் பதியப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் மற்றும் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை அனைவரையும் விடுதலை செய்யவேண்டும், மனித உரிமைக்குழுக்களுக்கு நாட்டின் வட பகுதிக்கு செல்ல அனுமதி தரவேண்டும், அவசரகால மற்றும் பயங்கரவாத சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் போன்ற கோரிக்கைகளையும் ஹியூமன் ரைட்ஸ் வாட்சின் ஆய்வறிக்கை முன்வைத்துள்ளது.

0 comments:

Post a Comment