Friday, February 15, 2013

காலாவதியான தடா சட்டத்தின் அடிப்படையில் 4 பேரின் உயிரை பறிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது- டாக்டர் ராமதாஸ்!

pmk ramadas
சென்னை:வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கக் கூடாது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:பாலாறு கண்ணிவெடித் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மீசை மாதையன், சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன் ஆகியோருக்கும் கண்ணிவெடித் தாக்குதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் மொத்தம் 124 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்த போதிலும், அவர்களில் 117 பேர் விசாரணை நீதிமன்றத்திலேயே விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். மீதமுள்ள இவர்கள் 4 பேர் உள்பட 7 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்த போது, மூவரை விடுதலை செய்த உச்ச நீதிமன்றம், இந்த நால்வர் மீதான இரு குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடி செய்தனர்.
தடா சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தடா என்ற அடக்குமுறைச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் இச்சட்டம் காலாவதியாகப்பட்டுள்ளது. இப்படிக் காலாவதியான ஒரு சட்டத்தின் அடிப்படையில் 4 பேரின் உயிரைப் பறிப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 தமிழர்களையும் விடுதலை செய்வதுடன், இந்தியாவில் தூக்கு தண்டனையை முழுமையாக ஒழிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment