Wednesday, February 13, 2013

அஸ்ஸாமில் போலீஸ் துப்பாக்கிச்சூடு! 12 பேர் பலி!

12 shot dead in assam   
     கோல்பாரா:அஸ்ஸாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஊராட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையைத் தடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 3 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.

    அஸ்ஸாம் மாநிலத்தின் கோல்பாரா மற்றும் காமரூப் மாவட்டங்களில் ரபா ஹசாங் தன்னாட்சிக் கவுன்சில் அதிகாரத்திற்கு உள்ளிட்ட பகுதிகளில் ஊராட்சித் தேர்தலை நடத்த அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், தன்னாட்சிக் கவுன்சிலுக்கு முதலில் தேர்தலை நடத்திவிட்டுப் பின்னர் ஊராட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று ரபா ஹசாங் கூட்டுப் போராட்டக் குழு வலியுறுத்தியது.

     ஆனால், அஸ்ஸாம் அரசு கடந்த ஜனவரி 30, பிப்ரவரி 6 ஆகிய தேதிகளில் முதல் இரு கட்டத் தேர்தலை நடத்தி முடித்தது.

    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடந்த மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் போது வன்முறைச் சம்பங்கள் நடைபெற்றன. வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீஸார் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் கஹிர்பாரியில் 4 பேர், கசதாலில் இருவர், சிலுகுட்டில் இருவர், ரக்ஷிசினியில் 2 பேர், பேகிபுல் பகுதியில் இருவர் என துப்பாக்கிச்சூட்டுக்கு மொத்தம் 12 பேர் உயிரிழந்து விட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்களைக் கட்டுக்குள் கொண்டு வர போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டியிருந்தது என்று அஸ்ஸாம் மாநில முதன்மைச் செயலர் திரிபாதி தெரிவித்தார். இந்த வன்முறைச் சம்பத்தில் ஒரு போலீஸ் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச வன்முறையாளர்கள் முயன்றபோது, பொதுமக்கள் அவர்களைத் தாக்கினர்.

    போலீஸாரின் வாகனங்கள், தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் வாகனங்கள், பத்திரிகை அலுவலகம் ஆகியவற்றுக்கு தீ வைக்கும் சம்பங்களும் நடைபெற்றன. கோல்பாராவின் அருகில் உள்ள காமரூப் மாவட்டத்திலும் தேர்தல் தொடர்பான வன்முறைகளும், தீ வைப்புச் சம்வங்களும் பெருமளவில் நடைபெற்றன.

    இதனிடையே ரபா ஹசாங் அமைப்புகள் அடங்கிய கூட்டுப் போராட்டக் குழு செவ்வாய்க்கிழமை மக்கள் பங்கேற்புடன் நடக்கும் ஊரடங்குக்கு அழைப்பு விடுத்தது. இதனால் காலை ஏழு மணி முதல் மாலை ஏழு மணி வரை மக்கள் வீடுகளுக்குள் இருந்தனர். கடைகள் மூடப்பட்டன. வாக்குப்பதிவை முன்னிட்டு கல்வி நிலையங்கள், வங்கிகள் விடுமுறை அறிவித்திருந்தன.

     துப்பாக்கிச் சூடு குறித்து அஸ்ஸாம் முதல்வர் தருண் கோகோய் செய்தியாளர்களிடம் கூறுகையில்,  “வன்முறைச் சம்பங்கள் துரதிஷ்டவசமானவை. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும். சேதமடைந்த வீடுகளுக்கும், சொத்துகளுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்படும்” என்றார்.

0 comments:

Post a Comment