Sunday, February 17, 2013

2006 மும்பை ரெயில் குண்டுவெடிப்பு: தடுமாறும் ஏ.டி.எஸ்!

mumbai_blasts
மும்பை:209 பேர் பலியான 2006 ஜூலை 11-ஆம் தேதி மும்பையில் நடந்த ரெயில் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் விசாரணை நடத்திய மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை தடுமாறிவருகிறது. பாகிஸ்தானில் இயங்கும் லஷ்கர்-இ-தய்யிபா திட்டமிட்டு சிமி இயக்க உறுப்பினர்கள் ரெயில் குண்டுவெடிப்பை நடத்தியதாக ஏ.டி.எஸ் கூறியது. ஆனால், இதர புலனாய்வு ஏஜன்சிகள் கண்டுபிடித்தாக கூறி சம்பந்தப்பட்ட நபர்களை ஒப்படைக்க இந்தியா, பாகிஸ்தானுக்கு அளித்த பட்டியல் ஏ.டி.எஸ் கூறுவதற்கு மாற்றமாக உள்ளது.
     இது தொடர்பாக ஏ.டி.எஸ் கைது செய்த நபர் இந்த விபரங்களை சுட்டிக்காட்டி மத்திய உள்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இவ்வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம்(ஏ.டி.எஸ்) ஒப்படைக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதற்கு காரணமான தொலைபேசி உரையாடல் பதிவுகள் அழிந்துபோனதாக ஏ.டி.எஸ் மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
     யுனானி டாக்டர் உள்பட 13 சிமி உறுப்பினர்களை இவ்வழக்கில் ஏ.டி.எஸ் கைது செய்தது. குண்டுவெடிப்பு நிகழ்ந்து 2 வாரத்திற்குள் கைது நிகழ்ந்தது. அன்று கே.பி.ரகுவன்சி ஏ.டி.எஸ்ஸின் தலைவராக இருந்தார். தற்போது அவர் தானே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகிக்கிறார். 25 பேர் மீது ஏ.டி.எஸ் வழக்கு பதிவு செய்தது. பாகிஸ்தானைச் சார்ந்த அஸீம் ஸீமா என்பவர்தாம் முக்கிய சூத்திரதாரி என்றும், இவர் உள்பட 12 பேர் தலைமறைவுக் குற்றவாளிகள் என்றும் ஏ.டி.எஸ் கூறியது.
     ஏ.டி.எஸ் சிறப்பு மோக்கா(MOCCA) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து 2 ஆண்டுகள் கழிந்த பிறகு மும்பை க்ரைம் ப்ராஞ்ச் புது கதையை தயாரித்துள்ளது. இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் தாம் மும்பை ரெயில் குண்டுவெடிப்புக்கு காரணம் என்பது க்ரைம் ப்ராஞ்சின் வாதமாகும். இந்தியன் முஜாஹிதீன் உறுப்பினர்கள் என்று சந்தேகிக்கப்படும் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஸாதிக் ஷேக் என்பவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது க்ரைம் ப்ராஞ்சிற்கு முக்கிய ஆதாரமாம். க்ரைம் ப்ராஞ்சின் கண்டுபிடிப்பில் முக்கிய சூத்திரதாரி வேறொரு நபர் ஆவார். அன்று ராகேஷ் மரியா க்ரைம் ப்ராஞ்ச் தலைவராக இருந்தார். ஹேமந்த் கர்காரே ஏ.டி.எஸ் தலைவராக பதவி வகித்தார். மும்பை தாக்குதலின் போது கர்காரே கொல்லப்பட்டதுடன் மீண்டும் ரகுவன்சி மீண்டும் ஏ.டி.எஸ் தலைவர் ஆனார். அத்துடன் க்ரைம் ப்ராஞ்சின் வாதம் மூடப்பட்டது.
     2010 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் இந்தியா, பாகிஸ்தானிடம் ஒப்படைத்த தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலில் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய சூத்திரதாரி அஸிம் ஸீமாவை குறிப்பிடவில்லை. இன்னொரு நபரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மும்பை தாக்குதல் தொடர்பாக அமெரிக்காவில் கைதான டேவிட் கோல்மான் ஹெட்லி ரெயில் குண்டுவெடிப்பு குறித்து கூறியிருந்தாராம். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முக்கிய சூத்திரதாரியின் பட்டியலில் அஸீம் ஸீமாவின் பெயர் நீக்கப்பட்டு இன்னொரு பெயர் சேர்க்கப்பட்டது.
     சிமி இயக்க உறுப்பினர்கள் தங்களுக்கு எதிரான ஆதாரமாக கூறப்படும் தொலைபேசி உரையாடல்களின் பதிவு நகலை கேட்டபொழுது அவை அழிந்துபோனதாக ஏ.டி.எஸ் கூறியது. அவை கிடைக்க வேண்டுமென்றால் மொபைல் கம்பெனிகள் 34.10 லட்சம் ரூபாய் கேட்டதற்கு காரணம், குற்றம் சாட்டப்பட்டோர் தங்களின் கோரிக்கையை வாபஸ் பெறவேண்டும் என்பதற்காகத்தான் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தொலைபேசி உரையாடல்களின் பதிவு ஆவணம், ஏ.டி.எஸ்ஸின் குற்றப்பத்திரிகையில் உட்படுத்தவில்லை.

0 comments:

Post a Comment