Wednesday, February 27, 2013

முஸ்லிம் இளைஞர்களை சிக்கவைக்க அரசு சதிச் செய்கிறது – பெங்களூர் தீவிரவாத ஜோடிப்பு வழக்கில் விடுதலையான முதீவுர் ரஹ்மான் சித்தீகி!


     பெங்களூர்:கல்வியாளர்களும், உயர் துறைகளில் பணியாற்றுவோருமான முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாத வழக்குகளில் சிக்க வைக்க அரசும், உளவுத்துறையும் சூழ்ச்சிச் செய்வதாக பெங்களூரில் நேற்று முன் தினம் விடுதலையான டெக்கான் ஹெரால்ட் பத்திரிகையாளர் முதீவுர் ரஹ்மான் சித்தீகி தெரிவித்துள்ளார்.

    மூத்த பத்திரிகையாளர்கள் உள்பட சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி கர்நாடகா பா.ஜ.க அரசு முதீவுர் ரஹ்மான் சித்தீகி உள்பட 12 பேரை கைதுச் செய்து சிறையில் அடைத்தது. தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சேல்ஸ்மான் முஹம்மது யூசுஃப் நல்பந்தியும் சித்தீக்குடன் விடுதலையாகியுள்ளார்.
     நேற்று குடும்பத்தினருடன் பெங்களூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் முதீவுர்ரஹ்மான் சித்தீகி கூறியது: என்னுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் நிரபராதிகள் என்று நான் கருதுகிறேன். போலீஸ் கஸ்டடியில் கடுமையான மனோரீதியான சித்திரவதைகளை சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி துப்பாக்கிகளுடன் எங்களை பிடித்ததாக போலீஸ் கூறியது. ஆனால், இரவில் அறைக்குள் நுழைந்து போலீஸ் என்னையும் இதர நான்குபேரையும் கடத்திச் சென்றது. சிறையில் யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு ஏஜன்சிகள் விசாரணை நடத்தின. ஆனால், அவர்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய் என்று தெரியவந்தது.

      பத்திரிகை துறையில் தொடருவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த முதீவுர் ரஹ்மான் சித்தீகி கூறுகையில், “போலீசும், அரசும், பாசிச சக்திகளும் சேர்ந்து எங்களை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். தற்போது குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன். மனித உரிமை கமிஷனின் உதவியுடன் சட்டரீதியான போராட்டம் தொடரும். இவ்வாறு சித்தீகி கூறினார்.

     லஷ்கர்-இ-தய்யிபா, ஹுஜி  போன்ற போராளிக் குழுக்களின் தலைமையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல்களுக்கு சதித் திட்டம் தீட்டினார்கள் என்று குற்றம்சாட்டி போலீஸ் கைதுச் செய்த 2 பேர் ஆறு மாத சிறைக்குப் பிறகு ஆதாரங்கள் எதுவுமில்லை என்று என்.ஐ.ஏ கண்டறிந்த பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் கைதான டி.ஆர்.டி.ஒ விஞ்ஞானி இஜாஸ் அஹ்மத் மிர்ஸாவுக்கு எதிராகவும் ஆதாரங்கள் எதனையும் கண்டுபிடிக்க என்.ஐ.ஏவால் இயலவில்லை.

0 comments:

Post a Comment