Friday, June 15, 2012

மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம்

ராணுவ ஆட்சியில் இருந்து ஜனநாயகத்தை நோக்கி திரும்பும் மியான்மரில் உள்ள ராக்கினே மாகாணத்தில் கடந்த வாரம் துவங்கிய வகுப்புவாத கலவரம் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகும் ஓயவில்லை.

இம்மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான சித்வேயிலும், சுற்று வட்டார பகுதிகளிலும் முஸ்லிம்களுக்கும், புத்தர்களுக்கும் இடையே மோதல் தொடருவதாக செய்திகள் கூறுகின்றன. இதுவரை 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளனர்.

கலவரத்தை ஒடுக்க அதிபர் தைன் ஸென் ராணுவத்தை நிறுத்தியுள்ளார். இதனிடையே அதிகமான இறந்த உடல்களை ராணுவம் கண்டுபிடித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராகினே மாகாணத்தில் பெரும்பான்மையரான பெளத்தர்களுக்கும், சிறுபான்மையினரான ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும் இடையே பல வருடங்களாக நீடித்து வந்த பகைமை கடுமையான கலவரமாக கடந்த வெள்ளிக்கிழமை மாறியது. ஜூன் 4-ஆம் தேதி புத்தமதத்தைச் சார்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டார். இதற்கு காரணம் முஸ்லிம்கள் என குற்றம் சாட்டப்பட்டு கலவரம் துவங்கியது.

புத்த பெண்மணியின் கொலைத் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்ட போதிலும் எதிர்பாராத விதமாக கலவரம் தீவிரமடைந்தது. ஜூன் 3 இல் சுமார் 300 பௌத்த மக்களால் சுற்றி வளைக்கப்பட்ட 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று இன்னொரு தகவல் கூறுகிறது.

கலவரத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை மியான்மர் அரசு அவசரநிலையை பிரகடனப்படுத்தியது. இப்பகுதியில் பல முஸ்லிம் குடும்பங்களையும் ராணுவம் வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது. அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதேசத்தில் கடைகள், கல்வி நிலையங்கள், வங்கிகள் மூடப்பட்டுள்ளன.

பெண்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படகு மூலம் பங்களாதேஷ் சென்றுவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. ராணுவம் ரோந்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், பாதுகாப்புக்கு ராணுவத்தினரின் எண்ணிக்கை போதாது என கூறப்படுகிறது.

இதனிடையே மியான்மரின் ஜனநாயக முயற்சிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவாக இக்கலவரத்தை சிலர் கருதுகின்றனர். பல தசாப்தங்களுக்கு முன்பு பங்களாதேஷில் இருந்து குடியேறிய ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்க மியான்மர் ராணுவ அரசு இதுவரை முன்வரவில்லை. மியான்மர்-பங்களாதேஷ் எல்லைப் பகுதியில் வாழும் இவர்களுக்கு இரு நாடுகளிலும் குடியுரிமை இல்லை.இவ்வாறு எட்டுலட்சம் பேர் புலன்பெயர்ந்தோராக வாழ்வதாக ஐ.நா கூறுகிறது.



தற்பொழுது புதிய அரசியல் சாசன சீர்திருத்தங்களில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. அதேவேளையில் வங்காள மொழி பேசும் ரோஹிங்கியா முஸ்லிம்களை இதர பிரிவினர் அங்கீகரிக்க தயாரில்லை. தற்பொழுது சீர்திருத்த நடவடிக்கையின் ஒருபகுதியாக இண்டர்நெட் மற்றும் இதர ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஓரளவு தளர்த்தப்பட்டிருப்பதை தொடர்ந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக வெறுப்புணர்வு பரப்புரைச் செய்யப்பட்டதும் கலவரத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

ரோஹிங்கியா முஸ்லிம்களை ஆக்கிரமிப்பாளர்களாகவும், தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் ஏராளமான ஆன்லைன் போஸ்டர்கள் அண்மையில் தீவிரமாக பரப்புரைச் செய்யப்பட்டன.

thanks to viyal velli

0 comments:

Post a Comment