திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை விமர்சனம் செய்ததாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் திக்விஜய் சிங்கை கட்சி மேலிடம் கண்டித்துள்ளது. ""பொது விஷயங்கள் பற்றி இனி திக்விஜய் சிங் பேசும் எந்த வார்த்தையும் காங்கிரஸ் கட்சியின் கருத்தாகக் கருதக் கூடாது'' என்று அக்கட்சி மேலிடம் அறிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான விவகாரத்தில், மம்தா பானர்ஜியை விமர்சிக்கும் வகையில் ""முதிர்ச்சியற்றவர்,ஒழுங்கீனமற்றவர்'' என திக்விஜய் சிங் கருத்து கூறினார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்ட
அறிக்கையில், ""காங்கிரஸ் கட்சி சார்பில் ஊடகங்களிடம் பேசுவதற்கு திக்விஜய் சிங்குக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை'' என்று கூறப்பட்டுள்ளது.காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரான திக்விஜய் சிங், உத்தரப் பிரதேசம், அசாம் ஆகிய மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் மேலிடப் பொறுப்பாளராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குத் தினமும் தவறாமல் வரும் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து கொண்டே திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, அப்துல் கலாமை வேட்பாளராக அறிவித்தார்.
இதனால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி அடைந்தது. மம்தா பானர்ஜியைச் சமாதானப்படுத்த அவரது மாநிலத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜியே அவருடன் பேசித் தீர்வு காண முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தனியார் தொலைக்காட்சிக்கு திக்விஜய் சிங் அளித்த நேர்காணலில், ""மம்தா பானர்ஜியைச் சமாதானப்படுத்த பல முயற்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் மேற்கொண்டனர். ஆனால், அனைத்துக்கும் எல்லை உள்ளது. அவரது செயல்பாடு முதிர்ச்சியற்ற வகையிலும் ஒழுங்கீனமற்ற முறையிலும் உள்ளது'' என்று கூறியிருந்தார்.
thanks to asiananban
0 comments:
Post a Comment