Tuesday, June 19, 2012

கேரளா: கையெறி குண்டுடன் சட்டசபைக்கு வந்த மார்க்சிஸ்ட் எம்எல்ஏ


கையெறி குண்டு
திருவனந்தபுரம்:கேரள சட்டசபையில் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினரான  ஜெயராஜன் கையெறி குண்டுடன் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கியது. மறுநாள் முதல் மலப்புரம் அருகே நடந்த இரட்டைக் கொலையில் தொடர்புடைய முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. பஷீரை கைது செய்யக் கோரி சட்டசபையில் மார்க்சிஸ்ட் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து 12ம் தேதி முதல்
தொடர்ந்து 4 நாட்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை சபை கூடியதும் மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ ஜெயராஜன் ஒரு ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.
அவர் பேசுகையில், இடுக்கி மாவட்ட எஸ்.எப்.ஐ. துணை தலைவர் அனீஷ் ராஜை கொலை செய்தவர்களை கைது செய்யக் கோரி முதல்வர் உம்மன்சாண்டியிடம் மனு கொடுப்பதற்காக எஸ்.எப்.ஐ. மாணவர்கள் சென்றனர். மாணவிகள் மீதும் போலீசார் தாக்குதல் நடத்தினர். மாணவர்கள் மீது போலீசார் கையெறி குண்டையும் வீசினர். அதில் ஒரு கையெறி குண்டை நான் இப்போது சபைக்கு கொண்டு வந்துள்ளேன் என்று கூறி கையெறி குண்டை தூக்கி காண்பித்தார்.
இதையடுத்து சபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சபாநாயகர் கார்த்திகேயன், இது போன்ற குண்டுகள் உட்பட ஆயுதங்களை சபைக்குள் கொண்டு வரக்கூடாது என சட்டம் உள்ளது. ஆனால் உறுப்பினர் ஜெயராஜன் அதை மீறி கெயெறி குண்டை சபைக்கு கொண்டு வந்தது மன்னிக்க முடியாத குற்றமாகும். எனவே சபைக் காவலர்கள் உடனடியாக அந்த குண்டை கைப்பற்றி சபைக்கு வெளியே கொண்டு செல்லவேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து சபை காவலர்கள் அந்த குண்டை ஜெயராஜனிடமிருந்து வாங்கி வெளியே கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று கேரள சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
thanks to asiananban

0 comments:

Post a Comment