பெங்களூர்:நித்தியானந்தாவின் அமெரிக்க பெண் சீடர் ஆர்த்தி ராவ், பிடதி ஆசிரம ரகசியங்களை வீடியோ எடுத்து வெளியிட்டார். இது தொடர்பாக சமீபத்தில் சுவர்ணா என்ற கன்னட டி.வி யில் பேட்டியும் அளித்தார். அதற்கு விளக்கம் அளிக்க, பிடதி ஆசிரமத்தில் நித்தியானந்தா நேற்று பத்திரிகையாளர்களை வரவழைத்தார்.டி.வி பேட்டியில் நித்தியானந்தா குறித்து ஆர்த்தி ராவ் கூறுகையில்; “நித்யானந்தா, காவி
உடை அணிந்து மக்களை ஏமாற்றுகிறார். அவரால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அந்தஸ்தை எண்ணி, வெளியில் சொல்லாமல், குமுறிக் கொண்டுள்ளனர். அவரிடம் எந்த சக்தியும் இல்லை. பக்தர்களை ஏமாற்றி, பணம் சம்பாதித்தார். இந்தியாவில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் சொத்துகள் உள்ளன. இது குறித்து, அரசு விசாரணை செய்ய வேண்டும். தியானம் கற்றுக் கொள்ள வந்த என்னிடம், பல முறை உறவு கொண்டார். அவரால் பாதிக்கப்பட்ட நான், அவர் மீது வழக்கு தொடர உள்ளேன்” என்று கூறியிருந்தார்.ஆர்த்தி ராவ் குறித்து நித்தியானந்தா கூறுகையில், “பாலியல் நோய்க்காக ஆர்த்தி ராவ் என்னிடம் சிகிச்சை பெற வந்தார். அவருடன் எனக்கு குரு சிஷ்யை உறவு மட்டுமே உள்ளது. அவர் மீது அமெரிக்கா, தமிழகம், ராம நகரம், வாரணாசியில் வழக்குகள் உள்ளன. அவற்றில் வழங்கிய சம்மனை பெற்று கொள்ளாமல் தலைமறைவாகி உள்ளார்” என்றார்.
அப்போது டி.வி நிருபர் ஒருவர் குறுக்கிட்டு,”ஆர்த்தி ராவ் விவகாரம் தொடர்பாக உங்களுக்கு வந்த சம்மனை ஏன் வாங்கவில்லை?” என கேட்டார். அதற்கு, “எனக்கு சம்மன் எதுவும் வரவில்லை” என்று நித்தியானந்தா பதிலளித்தார். உடனே, “அந்த சம்மன் நகல் என்னிடம் உள்ளது” என கூறியபடி ஒரு காகிதத்துடன் நித்தியானந்தா அருகே நிருபர் சென்றார்.
“சம்மன் நகலை காண்பித்து, சம்மனை வாங்காமல், திருப்பி அனுப்பியுள்ளீர்கள். சம்மனை பெறாவிட்டால், நீதிமன்றம் விட்டு விடாது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி மீண்டும் வாரண்ட் வரும்” என்றார். இதனால், கோபமடைந்த நித்யானந்தா, பத்திரிகையாளர் சந்திப்பில், மற்றவர்களுக்கு அனுமதியில்லை. பத்திரிகையாளர்கள் தவிர, மற்றவர்களை வெளியேற்றுங்கள் என்று சீடர்களுக்கு உத்தரவிட்டார். இதனால் சீடர்கள், நிருபர் அஜித்தை வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் வாக்குவாதம் முற்றியது. கைகலப்பு சூழ்நிலை உருவானது. நிருபர்கள் சிலர், கை கலப்பை கட்டுப்படுத்த முயன்றனர்.
உடனடியாக நித்யானந்தா, “பிரஸ் மீட்டுக்காக அழைத்தேன். ஆனால், தேவையின்றி சட்ட விஷயங்கள் பேசுகின்றவர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நேரங்களில், பக்தர்களும், சீடர்களும் அரணாக இருந்து பாதுகாக்க வேண்டும்” என்றார். பேட்டியின் போது, அடிக்கடி மாஜி நடிகை, ராகசுதாவை அழைத்து, பத்திரிகையாளர்களை அங்கிருந்து வெளியேற்றும்படி உத்தரவிட்டார். இந்த ரகளையின் போது, மதுரை ஆதீனம், தன் கன்னத்தில், ‘கை’ வைத்தவாறு, சோகமாக பார்த்து கொண்டிருந்தார்.
உடனே நிருபரை சூழ்ந்த கூட்டம், அவரை தாக்கி வெளியேற்றியது. பெண் சீடர்களும் பத்திரிகையாளர்களை சூழ்ந்து கோஷமிட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியில் முடிந்தது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.
thanks to asiananban
0 comments:
Post a Comment