தமிழ்நாட்டின் திருச்சியைச் சேர்ந்த முத்துவேல் செல்லையா அவர்கள் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அங்கே வானிலை ஆராய்ச்சித் துறையில் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்க குடியுரிமை பெற்றவரான இவர், பல ஆண்டுகளாக வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் முக்கிய பொறுப்புக்களிலும் இருந்துவருகிறார். 1978 முதல் 1998 வரை இவர் பலமுறை இந்தியா வந்து தமிழ்நாட்டில் இருக்கும் தனது தாயார் பாப்பம்மாள் உட்பட தனது உறவினர்கள் அனைவரையும் சந்தித்து வந்தார்.
அனால் 2002 ஆம் ஆண்டு இவரது இந்திய கடவுச்சீட்டு ரத்து செய்யப்பட்டதாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் இவருக்கு தெரிவித்தனர். முத்துவேல் தாயாருடன்-பல ஆண்டுகளுக்கு முன் இப்படி ரத்து செய்ததற்கான காரணம் என்ன என்பதை இந்திய தூதரக அதிகாரிகள் தன்னிடம் கூற மறுத்து வருவதாக தெரிவித்த முத்துவேல் செல்லையா அவர்கள், தனக்கு மட்டுமல்லாமல் தனது பிள்ளைகளுக்கும் இந்தியா செல்ல கடவுச்சீட்டு மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இதன் விளைவாக, 90 வயதான தனது தாயார் பாப்பம்மாள் அவர்களை தன்னால் இந்தியா சென்று நேரில் சந்திக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறுகிறார். பார்வை மங்கி, காது கேட்கமுடியாத நிலையில் இருக்கும் தனது தாயாரை நேரில் சென்று சந்திக்க விரும்பி தான் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் கடந்த 13 ஆண்டுகளாக பயனளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அவரது தாயார் பாப்பம்மாள் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடுத்திருக்கிறார். அதில் இந்தியாவில் பிறந்த தனது நான்காவது மகனான முத்துவேல் செல்லையா இந்தியா வந்து தன்னை சந்திக்க இந்திய அரசு அனுமதிக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பில் இந்திய நடுவணரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
0 comments:
Post a Comment