Thursday, December 1, 2011

வீணாகும் மக்கள் பணம், விழிப்பாரா பொதுஜனம்?



Indian Parliment status
பத்து வருடங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. நாடாளுமன்றத்தின் மீது, நாட்டின் இறையான்மை மீது, ஜனநாயக நெறிமுறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அனைவரும் கூறினர். உண்மையில் அத்தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பது வேறு கேள்வி. ஆனால் அச்சம்பவத்தின் மூலம் அரசியல்வாதிகள், அதிலும் குறிப்பாக பாஜக, ஆதாயம் பெற்றனர்.
ஜனநாயகம், இறையான்மை என்று கூக்குரல் இட்டவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றனர்.? ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போதும் ஏதேனும் ஒரு பிரச்சனையை கிளப்பி நாடாளுமன்றத்தை முடக்குவதுதான் இவர்களின் வேலையாக உள்ளது. அன்று நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலை நடத்தியவர்கள் ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கினர் என்றால் இவர்கள் ஜனநாயகத்தை கேலிக்குரியதாக ஆக்கியுள்ளனர்.
நமது நாடாளுமன்றும் முறையாக எப்போது செயல்பட்டது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. ஒவ்வொரு நாளும் அவை பத்து மணிக்கு தொடங்குவதும் பின்னர் பதினொறு மணி வரை ஒத்திவைப்பு, பின்னர் இரண்டு மணி வரை ஒத்திவைப்பு, இறுதியாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு என்பது நமது தேசத்தில் ஒரு சடங்காக மாறியுள்ளது. இடையிடையே பள்ளி குழந்தைகளை ஆசிரியர் கையாள்வது போல் ‘பைட் ஜாயியே, பைட் ஜாயியே’ (அமருங்கள், அமருங்கள்) என்ற சபாநாயகரின் கெஞ்சல் வேறு. உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில் நடக்கும் இந்த கேலிக் கூத்துகளை உலகமே பார்த்து கைகொட்டி சிரிக்கிறது. அப்பாவியான பொதுஜனமோ விரக்தியில் இருக்கிறார்கள்.
சிலர் தங்களுக்குள் ஆவேசமாக பேசி ஆதங்கத்தை தீர்த்து கொள்கின்றனர். இளைஞர்கள் நாடாளுமன்ற கூத்துகளை நகைச்சுவையாக தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றனர். பலரும் தங்களின் விதியை நொந்தபடி அமைதியாக இருந்து விடுகின்றனர். ஆயிரக்கணக்கில் சம்பளம், சுகபோக வாழ்வு என அனைத்தையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் இவர்கள் செய்யும் அடாவடியால் தினமும் கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் வீணாகிப் போகிறது. ஏதோ வருகைப பதிவிற்காக கல்லூரிக்கு செல்லும் மாணவனை போன்று பத்து மணிக்கு அவைக்கு சென்று பத்தரை மணிக்கு வெளிநடப்பு செய்யும் இவர்களின் அடாவடிகள் எல்லையை மீறி சென்று கொண்டிருக்கின்றன.
மக்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் பேசுவதற்கு அமைக்கப்பட்டது தான் நாடாளுமன்றம். அதனை நடத்தாமல் முடக்குவதன் மூலம் மக்களின் நலன்கள் புறம் தள்ளப்படுகின்றன. கூச்சல்போடுவது மூலமும் ஒத்திவைப்பு மூலமும் நாட்டின் பிரச்சனைகள் தீர்க்கப்படுமா? இங்கு மற்றொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இன்று பல தொலைக்காட்சி சேனல்கள் விவாத நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கின்றன. அதில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் அதே பிரச்சனைகள்தான் அங்கும் விவாதிக்கப்படுகின்றன. அவற்றில் எல்லாம் பங்கு பெற்று தங்கள் கருத்துக்களை தெரிவிப்பவர்கள் அதே முறையை பாராளுமன்றத்திலும் ஏன் பின்பற்றுவதில்லை?
பிரச்சனை இத்துடன் முடிவதில்லை. அதிசயமாக என்றாவது நாடாளுமன்றம் ஒழுங்காக நடைபெறும் போது எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் உள்ளனர்? பல இருக்கைகள் காலியாக இருப்பதை நம்மால் காண முடியும். இருப்பவர்களில் சிலர் தூங்கி கொண்டும் மற்றவர்கள் மௌனமாக இருந்து கொண்டும் நமது நாட்டை வழி நடத்தி செல்கின்றனர்!! இதுதான் நமது நாட்டின் பரிதாபமான நிலை.
ஏதோ தேர்தலில் ஓட்டளித்து விட்டோம் அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்ற மனப்பான்மை பொது மக்களிடம் மாற வேண்டும். தங்களுடைய உறுப்பினரின் செயல்பாடுகளை கவனித்து அது குறித்து கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும். இப்போது வானத்திற்கும் பூமிக்கும் குதித்து கொண்டிருக்கிறீர்களே, நீங்கள் ஆட்சியில் இருந்த போது இதே பிரச்சனையை ஏன் கையாளவில்லை என்று இயல்பாக எழும் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும். முறையாக செயல்படாதவர்களுக்கு பொதுவாழ்வில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதால் கோடிக்கணக்கான பணம் வீணாகிறது. இப்பணத்தை அவையை நடத்த விடாமல் தடுக்கும் உறுப்பினர்களிடமிருந்து வாங்க வேண்டும். வேலைக்கு வராத அல்லது ஒழுங்காக வேலை செய்யாத பணியாளருக்கு சம்பளம் தருவதையோ வேலையில் தொடர்ந்து வைத்திருப்பதையோ எவரும் விரும்புவதில்லை. சாதாரண ஒரு நிறுவனத்திற்கே இந்நிலை என்றால் உலகின் மிகப்பெரும் ஜனநாயகத்தில்…
சிந்தனைக்கு…
-:ஏர்வை ரியாஸ்:-
sources onlinethoothu

0 comments:

Post a Comment