தெற்கு சூடானின் கிழக்குப் பகுதி மாநிலமான ஜாங்லெயில் போட்டி பழங்குடி இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பெருமளவிலானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களில் லூ நூர் பழங்குடி இன மக்களால் பல்லாயிரக்கணக்கான முர்லி இனப் பழங்குஇடி இனத்தவர்கள் தமது இருப்பிடங்களிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். "மோதல்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்றவை கிடைக்கவில்லை"
பிஃபோர் நகரிலிருந்து தப்பியோடி கெஞ்சன் நதிப் பகுதிக்கு போன முர்லி இனப் பெண்மணி ஒருவர் தாங்கள் அந்நகரிலிருந்து வெளியேறிய பிறகு, தமது உறவினர்கள் இருபது பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.
அந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கானவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டோ அல்லது தப்பிக்கும் போது அந்த நதியிலோ மூழ்கி இறந்திருக்கலாம் என்று செய்திகள் கூறுகின்றன. அப்படி இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் அல்லது சிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
"கால்நடைகள் பெருஞ்செல்வம்"
ஆடுமாடுகளை பிடித்துச் செல்வது தொடர்பிலான சர்ச்சைகள் இந்தப் பழங்குடி இனங்களுக்கு இடையே நீண்ட காலமாக இருந்து வருகின்றது என்றும் அதன் காரணமாகவே தற்போதைய மோதல்கள் பெரிதாக வெடித்துள்ளன என்று, எல்லைகளில்லா மருத்துவர்கள் அமைப்பின் தெற்கு சூடான் நாட்டுக்கான இயக்குநர் பார்த்தசாரதி ராஜேந்திரன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
தெற்கு சூடானிலுள்ள பழங்குடி மக்களிடையே ஆடுமாடுகள் பெரும் செல்வமாக கருதப்படுவதால், அவற்றை அபகரிக்கும் போதோ அல்லை கொலை செய்யும் போது அது பெரிய சமூகப் பிரச்சினைகளை ஏற்படுத்தி மோதல்களுக்கு வழி வகுக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
ஜாங்லெய் மாநிலத்தில் நடைபெற்ற மோதல்கள் காரணமாக பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறி, புதர்களில் மறைந்து வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறுகிறார். அப்படியான மக்களுக்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் போன்றவை கூட கிடைக்காத நிலை உள்ளது என்றும் பார்த்தசாரதி தெரிவித்தார்.
ஜாங்லெய் மாநிலத்தின் பிஃபோர் பகுதியில் பல ஆண்டுகளாக எல்லைகளில்லா மருத்துவர்கள் அமைப்பே அங்கு செயல்படும் ஒரே மருத்துவமனையை நடத்தி வந்தது என்றும் , அந்த மருத்துவமனையும் தற்போதைய மோதல்களில் சேதமடைந்துள்ளது எனவும் அவர் கூறுகிறார்.
thanks to yarlmuslim
0 comments:
Post a Comment