Saturday, December 10, 2011

எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிம்கள் - இராணுவ ஆட்சியாளர் முரண்பாடு அதிகரிப்பு


எகிப்திய தேர்தலில் முன்னணி வகிக்கும் இஹ்வான்களுக்கும், ஆளும் இடைக்கால இராணுவ உயர் சபைக்குமிடையில் மீண்டும் முறுகல் ஏற்பட்டுள்ளது. ‘‘தேர்தல் நீதியாக நடந்தது என்றாலும், அது எகிப்தின் எல்லாப் பிரிவையும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை‘‘ என இராணு சபையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் முக்தார் அல் முல்லா ஊடகவியலாளர் மாநாடொன்றின்போது தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியிலேயே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தேர்தல் நீதியாக நடந்தது என்று ஏற்றுக் கொள்ளும் இராணுவம், மக்களை சரியாக அது பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்று கூறுவதன் மூலம் ஜனநாயகத்தையே கொச்சைப்படுத்துகிறது. உண்மையில் தாம் விரும்பிய முடிவு வரவில்லை என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாமியவாதிகளது வெற்றியை அவர்களால் சகிக்க முடியவில்லை.

இது பாராளுமன்றத்தின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் இராணுவத்தின் தந்திரம். இராணுவம் தனக்குச் சார்பானவர்களை வைத்துக் கொண்டு, தனக்கு விருப்பமான புதிய அரசியல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது என இஹ்வான்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எகிப்தில் தற்போது மூன்று கட்டங்களாக நடந்துவரும் பாராளுமன்ற தேர்தல் ஜனவரி முதல் வாரத்திலேயே முடிவடையும். 

புதிய பாராளுமன்றத்திலிருந்து 100 பேரைத் தெரிவு செய்து, அரசியல் அமைப்பை வரையும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த 100 பேரை தாமே தெரிவு செய்வோம் என இராணுவம் பிடிவாதமாக உள்ளது. ஆனால், அதனை புதிய பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என இஹ்வான்கள் கூறிவருகின்றனர்.

இதனால் இஸ்லாமியவாதிகளுக்கும் இராணுவத்திற்குமிடையில் முறுகல் நிலை அதிகரித்துவருகிறது. இது இவ்வாறிருக்க, இராணுவம் நியமித்துள்ள ஆலோசனை சபையில் இணையாமல், விலகி இருக்கப்போவதாக இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கம் அறிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment