"உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களின் போது வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பணத்தை வாரியிறைக்கும் என, எதிர்ப்பார்க்கிறோம்' என்று, தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி கவலை தெரிவித்துள்ளார்.
உ.பி., பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய்.குரேஷி இது குறித்து கூறியதாவது:ஐந்து மாநில தேர்தல்களில் உ.பி., பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சிகள் பணத்தை வாரியிறைக்கும் என, எதிர்ப்பார்க்கிறோம். இதை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். பீகார் தேர்தலின் போதே, நாங்கள் தேர்தலில் பணம் விளையாடுவதை தடுக்க ஆரம்பித்தோம். தமிழகத்தில் தான் எங்கள் முயற்சி வெற்றி பெற்றது. அப்போது நடந்த ஐந்து மாநில தேர்தலில் 73 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் மட்டும் தேர்தல் நேரத்தில் விநியோகிக்கப்பட இருந்த 60 கோடி ரூபாயை பறிமுதல் செய்தோம்.இதே பாணியை தற்போதைய தேர்தல்களிலும் பின்பற்ற உள்ளோம். விமான நிலையம், பஸ் நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களிலும், பண்ணை வீடுகள், ஓட்டல்கள் ஆகிய இடங்களிலும் வாக்காளர்களுக்கான பணம் விநியோகிக்கப்படலாம் என்பதால், இந்த இடங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளோம்.
பத்திரிகைகளிலும், "டிவி'க்களிலும் காசு கொடுத்து வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவான செய்திகளை வெளியிடுவதை தடுக்கவும், முழு முயற்சி எடுத்துள்ளோம். தற்போது பெரும்பாலான கட்சிகள் தனி சேனல்களையும், பத்திரிகைகளையும் நடத்தி வருகின்றன. தேர்தல் நேரத்தில் அவர்களைப் பற்றி இந்த ஊடகங்களில் வரும் செய்தியை கண்காணித்து, அது தொடர்பான செலவுகள் வேட்பாளர்கள் கணக்கில் சேர்க்கப்படும். கடந்த 2007ல், பீகார் சட்டசபை தேர்தலின் போது தனக்கு ஆதரவான செய்தி வெளியிடக்கோரி ரூபாய் கொடுத்த, ராஷ்டிரிய பரிவர்த்தன் தள எம்.எல்.ஏ., உமலேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டதை செல்லாது என அறிவித்தோம்.தேர்தல் நேர செலவுகளை கண்காணிக்க வருமானவரித் துறையினரையும், வருமானவரித் துறை கமிஷனரையும் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்பட ஏற்பாடு செய்துள்ளோம்.இவ்வாறு குரேஷி கூறினார்.
யானை, மாயாவதி சிலைகள் மூடல் :உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், அங்கு பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், முதல்வர் மாயாவதியின் சிலைகளையும் மூட வேண்டும் என, தேர்தல் ஆணையம் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டது."இந்த உத்தரவு தலித்களுக்கு விரோதமானது மற்றும் பாரபட்சமானது' என, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி விமர்சித்தது. அதேநேரத்தில், முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சி வரவேற்றது. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை அடுத்து, மாயாவதி சிலைகளையும், யானை சிலைகளையும் துணிபோட்டு மூடும் நடவடிக்கைகளை, உ.பி., மாநில அரசு துவக்கியுள்ளது.
thanks to thedipaar.com
0 comments:
Post a Comment