27 Feb 2013
புதுடெல்லி:பாராளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட 2013-14-ம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் சரக்குக் கட்டணம் 5.8 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது; எனினும் பயணிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று கூறினாலும் முன்பதிவு, டிக்கெட்டை ரத்துச் செய்வது, தட்கல் ஆகிய கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சல் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். கடந்த 17 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்வது இதுவே முதல்முறை.
முன்பதிவு, டிக்கெட்டை ரத்து செய்வது உள்ளிட்டவற்றுக்கான கட்டணங்களும்,தட்கல் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மறைமுகமாக பயணிகள் மீதும் சுமை ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட்டது. பட்ஜெட்டில் பார்சல், லக்கேஜ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. முன்பதிவுக்கான கட்டணம், அதனை ரத்து செய்யும்போது பிடித்தம் செய்யப்படும் தொகை, அதிவிரைவு ரயில்களில் கூடுதலாக வசூலிக்கப்படும் கட்டணம் ஆகியவை உயர்த்தப்படுகிறது.
இதன் மூலம் ரயிலில் இரண்டாம் வகுப்பில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்தபட்சம் 5 ரூபாயும், ஏசி, முதல் வகுப்பு ஆகியவற்றில் முன்பதிவு செய்யும் பயணிகள் குறைந்தபட்சம் 25 ரூபாயும் கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இவை அனைத்துமே மறைமுக கட்டண உயர்வுதான்.
இரண்டாம் வகுப்பு தத்கல் முன்பதிவுக் கட்டணம் ரூ.15, ஏசி உள்ளிட்டவகுப்புகளுக்கான தத்கல் கட்டணம் ரூ.100 வரையும் உயர்த்தப்படும். முன்பதிவு டிக்கெட் ரத்து செய்யப்படும் போது இரண்டாம் வகுப்புக்கு ரூ.5-ம், ஏசி உள்ளிட்ட பிற பிரிவுகளுக்கு ரூ.50-ம் கூடுதலாக பிடித்தம் செய்யப்படும். இக்கட்டண உயர்வு அனைத்தும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதுபோன்ற கட்டண உயர்வுகளால் ஆண்டுக்கு ரூ.4,683 கோடி கூடுதல் வருவாய்கிடைக்கும் என்று பட்ஜெட் உரையில் பன்சல் தெரிவித்தார். 5.8 சதவீத சரக்குக் கட்டண உயர்வு என்பது உணவு தானியங்கள், நிலக்கரி, உருக்கு, யூரியா, இரும்புத் தாது, டீசல், மண்ணெண்ணெய், கேஸ் உள்ளிட்டவற்றுக்குப் பொருந்தும். இதனால் நாட்டில் அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் மேலும் உயர்ந்து பணவீக்கம் அதிகரிக்கும் என்றுஅஞ்சப்படுகிறது.
ரயில்வே நிதிநிலையை சீரமைக்கும் முயற்சியாக முன்பு எப்போதும் இல்லாதவகையில் இந்த பட்ஜெட்டில் ஒரு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி ரயிலுக்கான எரிபொருளான டீசல் விலைக்கு ஏற்ப சரக்குக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும். அதாவது டீசல் விலை அதிகரித்தால் சரக்குக் கட்டணமும் உயரும், டீசல் விலை குறைந்தால் அதற்கு ஏற்ப சரக்கு கட்டணம் குறைக்கப்படும். ஆண்டுக்கு இருமுறை இவ்வாறு கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு ரயில்வே அமைச்சராக இருந்த தினேஷ் திரிவேதி கடந்த ஆண்டே இந்தத் திட்டத்தை பரிந்துரைத்திருந்தார். இந்த முறையை அறிவித்துப் பேசிய பன்சல், “டீசலை மொத்தமாக வாங்கிப் பயன்படுத்தும் ரயில்வே உள்ளிட்ட துறைகளுக்கு டீசல் விலை பெருமளவில் உயர்த்தப்பட்டதும், டீசல் விலை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதும் ரயில்வேயின் அன்றாட இயக்கச் செலவை அதிகரித்துள்ளது. எனவே இந்த செலவின உயர்வை சமாளிக்க ஒரு வழிமுறையைக் கையாள வேண்டியிருக்கிறது. டீசல் விலை உயர்வால் கடந்த மாதம் பயணிகள் கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் கூடுதலாகக் கிடைக்கும் என்று கருதப்பட்ட ரூ.6,600 கோடியில் பாதியளவே ரயில்வேக்கு கிடைக்கும்’ என்று குறிப்பிட்டார்.
“பயணிகள் கட்டணம் கடந்த மாதம்தான் மாற்றி அமைக்கப்பட்டது. எனவே பயணிகள் மீது கூடுதல் சுமையை ஏற்ற விரும்பவில்லை’ என்று பட்ஜெட் உரையில் பன்சல் தெரிவித்தார்.
பட்ஜெட்டுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சரக்குக் கட்டணம்,முன்பதிவு கட்டணம், தத்கல் கட்டணம் உயர்த்தியதற்காக நான் வருந்தவில்லை.சரக்குக் கட்டணம் மாற்றி அமைக்கப்படும்போது சராசரியாக 5 சதவீதம் உயர்த்தப்படுவது இயல்பானதுதான்’ என்று குறிப்பிட்டார்.