Saturday, February 5, 2011

பதவி விலக மறுக்கும் சர்வாதிகாரி முபாரக்: தொடர்கிறது போராட்டம்!

கெய்ரோ பிப் 4: எகிப்து அதிபர் முபாரக்கை உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மீண்டும் லட்சக்கணக்கானோர் தாரிர் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில், தற்போதைய துணை அதிபர் ஒமர் சுலைமானை அதிபராக்குவது குறித்து, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆலோசனை நடத்தினார். எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக், வெள்ளிக் கிழமைக்குள் (நேற்று) பதவி விலக, எதிர்க்கட்சிகள் மற்றும் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் கூட்டணி ஏற்கனவே கெடு விதித்திருந்தது. வெள்ளியன்று மீண்டும் மாபெரும் பேரணி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.அதன்படி, நேற்று தாரிர் சதுக்கத்தில் லட்சக்கணக்கானோர் குவிந்தனர். அதிபர் ஆதரவாளர் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையில் இரு நாட்களாக கடும் மோதல் நடந்து வந்ததால், நேற்று தாரிர் சதுக்கத்தைச் சுற்றிலும் ராணுவப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. சதுக்கத்திற்குள் நுழைவதற்கு முன், பல முறை மக்கள் சோதனையிடப்பட்டனர். நேற்று நண்பகலுக்குள் அங்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் திரண்டுவிட்டனர். நேற்றைய கூட்டம் அமைதியாகவே துவங்கியது. எனினும், அதிபர் ஆதரவாளர்கள் மீண்டும் மோதலில் ஈடுபட்டால், அவர்களை தாக்குவதற்குத் தேவையான கற்கள், கழிகள் எல்லாம் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. வானில் ராணுவ ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன. அலக்சாண்டிரியா மற்றும் மன்சூரா நகர்களிலும் நேற்று லட்சக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

0 comments:

Post a Comment