Thursday, December 8, 2011

அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் 4500 பேரை பணிநீக்கம் செய்கிறது சிட்டி பேங்க்..


அமெரிக்க பொருளாதார நெருக்கடியின்போது கடும் சரிவை சந்தித்த சிட்டி வங்கி இன்னும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. இந் நிலையில் அடுத்த சில மாதங்களில் உலகெங்கும் 4,500 பேரை பணியிலிருந்து நீக்கப் போவதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.

உலகெங்கும் இந்த வங்கியில் 2,67,000 பேர் பணியாற்றுகின்றனர். வங்கியின் செலவுகளைக் கட்டுப்படுத்த, இதில் 2 சதவீதம் பேரை (4,500 ஊழியர்கள்) பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் பண்டிட் அறிவித்துள்ளார்.

பணி நீக்கப்படும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க வங்கிக்கு ரூ. 200 கோடி செலவாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், ஆண்டுதோறும் சுமார் ரூ. 10,000 கோடியளவுக்கு செலவைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 7,000 கோடியளவுக்கு செலவைக் குறைத்துவிட்டோம்.
 
கடந்த ஆண்டில் சிட்டி வங்கியின் வருமானம் 86 பில்லியன் டாலராக இருந்தது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 61 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் நிலவும் மோசமான பொருளாதாரம் காரணமாக அந்த நாடுகளில் எங்களது சேவைகளைக் குறைத்துக் கொண்டுள்ளோம். வேகமாக வளர்ந்து வரும் நாடுகளைத் தான் குறி வைத்து எங்களது வர்த்தக நடவடிக்கைகளை பரவலாக்கி வருகிறோம் என்றார்.

ஏற்கனவே, பேங்க் ஆப் அமெரிக்கா, கோல்ட்மேன் சேக்ஸ், பேங்க் ஆப் நியூயார்க் மெல்லோன், சுவிஸ் வங்கியின் யுபிஎஸ் ஆகியவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

as
thedipaar.com

0 comments:

Post a Comment