Tuesday, January 10, 2012

எகிப்து இஹ்வான்களின் வசமாகிறது - அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம்


எகிப்தில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சி வெற்றி முகத்தில் இருப்பதால், அதனோடு அமெரிக்கா தனது உறவை வலுப்படுத்தி வருகிறது. எனினும், அந்த இயக்கத்தின் சில கொள்கைகள் குறித்து, அமெரிக்கா கவலை கொண்டிருக்கிறது.

எகிப்தில், பார்லிமென்டுக்கான பொதுத் தேர்தல்கள் மூன்று கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியிடப்படவில்லை. எனினும், இதுவரை கசிந்த தேர்தல் முடிவு பற்றிய தகவல்களின் அடிப்படையில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் நீதி மற்றும் விடுதலைக் கட்சி முன்னணியில் இருக்கிறது.

பிற கட்சிகளுக்குப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. எனினும், அல் நூர் என்ற பழமைவாதக் கட்சி கணிசமான இடங்களைப் பெறும் என்பது உறுதியாகிவிட்டது. அதோடு ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெறுவதற்காக, அல் நூர் கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக, முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

அல் நூரின் கணிசமான வெற்றி, சகோதரத்துவ இயக்கத்தின் இந்த அறிவிப்பு ஆகிய இரண்டும், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து விட்டன. ஹோஸ்னி முபாரக்கிற்குப் பின், எகிப்தில், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்திற்குத் தான் செல்வாக்கு இருக்கும் என்ற அடிப்படையில், அமெரிக்கா அந்த இயக்கத்துடனான தனது உறவை கடந்தாண்டே துவக்கிவிட்டது.

இதுகுறித்து, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், எகிப்து தேர்தலுக்கு முன் அளித்த பேட்டியில், ""எகிப்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் அடிப்படையில், அந்நாடு தொடர்பான தனது கொள்கையை அமெரிக்கா மறு சீரமைப்பு செய்து வருகிறது. அதன் ஒரு படியாக, முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்துடன், சில குறிப்பிட்ட தொடர்புகளை மட்டும் மேற்கொண்டுள்ளது'' என தெரிவித்தார்.

இதுகுறித்து, "உலக அமைதிக்கான கார்னீஜ் அறக்கட்டளை'யின் மத்திய கிழக்கு திட்டப் பிரிவில் பணியாற்றும், மரினா ஒட்டாவே கூறுகையில், ""இப்போது, முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் தான் முன்னணியில் உள்ளது. அதனால், அமெரிக்க அதிகாரிகள் அதனுடன் பேச வேண்டும். அந்த இயக்கம், வன்முறையைக் கைவிட்டு பல ஆண்டுகளாகி விட்டன. அதனால், அதன் மீதான சந்தேகத்தை, அமெரிக்கா கைவிட வேண்டும்'' என்றார்.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment