Tuesday, January 10, 2012
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மாதம் 150 ரூபாய்க்கு ஆன்லைனில் படிக்கலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம், இணையதளம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத்தரும் டில்லியில் உள்ள ‘கிரே செல்ஸ் 18 மீடியா’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம் நடத்தி வருகிறது. முதல் 15 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் படிக்க இலவசம். மாணவர்கள் தொடர்ந்து இந்தச்சேவையைப் பயன்படுத்த விரும்பினால் மாதம் ரூ. 150 கட்டணம் செலுத்தவேண்டும்.
‘பி.எஸ்.என்.எல். டாப்பர் லேர்னிங்’ என்ற அந்த இணையதளத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களையும், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ள முடியும்.
இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்கள் நடப்பு வாழ்க்கையில் எப்படிப் பயன்படுகிறது, ஆய்வுக்கூடங்களில் இப்பாடங்களில் உள்ள சோதனைகளை எப்படி செய்து பார்க்கலாம் என்பது உள்பட பல்வேறு வீடியோ காட்சிகள் ஒவ்வொரு பாடத்திற்கும் 2டி மற்றும் 3டி அனிமேஷன் முறையில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. பாடத்தில் இருக்கும் ஒவ்வொரு பிரிவையும் விளக்கமாக கற்றுத்தர 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே, மாணவர்கள் தங்கள் பாடங்களில் உள்ள ஒவ்வொரு கேள்வியையும், காட்சிகளாக வீடியோவில் பார்ப்பதால் பாடங்கள் எளிதில் மறந்துபோகாது.
பாடம் சம்பந்தமாக பார்த்த விஷயங்களை மாணவர்கள் எந்தளவிற்கு புரிந்துகொண்டார்கள் என்பதை சோதிக்க இந்த இணையதளத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வுக்கான மதிப்பெண்களையும் உடனடியாக தெரிந்துகொள்ளலாம். மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொருத்து அவர்களுக்கு அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான யோசனைகளை வல்லுநர்கள் அளிக்கும் வசதியும் இந்த இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் ஒவ்வொரு பாடத்திற்கும் பள்ளியில் அளிக்கும் வீட்டுப் பாடத்தில் ஏதேனும் புரியாத விஷயங்கள் இருப்பின் அதையும் இந்த இணையதளத்தில் கேள்விகளாக கேட்கலாம். கேள்விகளுக்கான விடைகள் வீடியோ வாயிலாகவோ அல்லது எழுத்து வடிவமாகவோ மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
இந்த இணையதளத்தில் வகுப்பு நடத்தும் அனைத்துஆசிரியர்களும் முக்கியக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆவார்கள். இவர்களிடம் தொடர்புகொண்டு பேச நினைக்கும் மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டுத் தெளிவு பெறவும் இந்த இணையத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர புத்தகங்களில் உள்ள பாடங்களை ஆன்லைனில் பி.டி.எஃப். வடிவத்தில் மாணவர்கள் பார்க்க முடியும். முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள், மாதிரி கேள்வித்தாள்கள் மற்றும் அதற்கான விடைகளும் இந்த இணையதளத்தில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த கேள்விகளுக்கு எப்படி விடையளிக்க வேண்டும். எந்தக் கேள்விக்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுகளில் பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் டிப்ஸ், லேட்டஸ்ட் கல்விச் செய்திகளையும் இந்த இணையதளத்தைப் பார்த்து மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் டூ படித்து முடித்தப்பிறகு ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சேருவதற்கான யோசனைகள், வழிமுறைகளையும் நிபுணர்கள் இந்த இணையதளத்தில் வழங்குகிறார்கள். பிளஸ் டூ முடித்தப் பிறகு அல்லது எந்தெந்தப் படிப்புகளுக்கு என்னமாதிரியான வேலைகள் இருக்கின்றன என்பதுபோன்ற தகவல்களும் தொகுத்து வைக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் எந்தப் படிப்புக்கு என்ன வேலை என்று மற்றவர்களைக் கேட்டு தெரிந்து கொள்வதற்குப் பதிலாக தாங்களாகவே படித்து தெரிந்துகொள்ளும் வசதியை இந்த இணையதளம் வழங்கியுள்ளது.
இத்தனை சிறப்பு அம்சங்கள் பொருந்திய இந்த இணையதளத்தில் கூடிய விரைவில் தமிழகத்தில் உள்ள சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்கள் தொகுத்து அளிக்கப்பட உள்ளன. வகுப்பறையைத் தாண்டி பாடம் சம்பந்தமான பல கேள்விகளை படக் காட்சிகளாக தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் இந்த இணையதளத்தைப் பார்த்துப் பயனடையலாம்.
விவரங்களுக்கு: http://bsnl.topperlearning.com/
thanks to campus front of india for giving this good informations.
0 comments:
Post a Comment