அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தும் முயற்சியை மத்திய அரசு இந்த ஆண்டு ஒத்தி வைத்துள்ளது. இதையடுத்து காஷ்மீர், ஆந்திரம் நீங்கலாக உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் 15 சதவீத இடங்களை நிரப்புவதற்காக அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.பி.எம்.டி.) நடைபெறும் தேதி தற்போது அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த ஆண்டு (2012) முதல் நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கு, இனி பொது நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு உள்பட பல்வேறு மாநில அரசுகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தன. இந்நிலையில் 2012 நடத்துவதாக இருந்த பொது மருத்துவ நுழைவுத் தேர்வை 2013 கல்வி ஆண்டிலிருந்து நடத்தப்போவதாக மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஆந்திரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் நீங்கலாக நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 15 சதவீத இடங்கள், மத்திய செகண்டரி கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் ஏ.ஐ.பி.எம்.டி. (AIPMT) நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்த கல்விக் கட்டணத்தில் சேர்ந்து படிக்க முடியும் என்பது இந்த நுழைவுத் தேர்வின் தனிச் சிறப்பு. இதனால், இத்தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
இந்த நுழைவுத் தேர்வை வரும் ஏப்ரல் முதல் தேதி நடத்த மத்திய செகண்டரி கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி 17 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். அதிகபட்சமாக டிசம்பர் 31 ஆம் தேதி 25 வயது வரை இருக்கலாம். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு வயது வரம்பில் 5 ஆண்டுகள் தளர்வு உண்டு. எந்தப் பிரிவு மாணவர்களாக இருந்தாலும், இந்த நுழைவுத் தேர்வை மூன்று முறை மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் இயற்பியல், வேதியியல் , உயிரியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், ஓபிசி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர் பிரிவு மாணவர்களாக இருக்கும் பட்சத்தில் 15 சதவீத இடங்களும், பழங்குடியின பிரிவு மாணவர்களாக இருக்கும்பட்சத்தில் 7.5 சதவீத இடங்களும், மத்திய கல்வி நிலையங்களில் மட்டும் 27 சதவீதம் நான் - கிரீமிலேயர் ஓபிசி மாணவர்களுக்கும் (அதாவது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்திற்கு குறைவாக உள்ள மாணவர்கள்), 3 சதவீதம் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும்.
மற்ற நுழைவுத் தேர்வு போல அல்லாமல் இந்த மருத்துவ நுழைவுத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வு. முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டும் மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதன்மைத்தேர்வானது மூன்று மணிநேரம் நடைபெறும். இந்தக் கேள்வித்தாள் அப்ஜெக்ட்டிவ் முறையில் அமைந்திருக்கும். மொத்தம் 200 கேள்விகள். இந்தக் கேள்விகள் வேதியியல், உயிரியல், இயற்பியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். இந்த முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 2 மணி நேரம். இத்தேர்வு மொத்தம் இரண்டு தாள்கள் இருக்கும். முதல் தாள் இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள் தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இருந்து கேட்கப்படும். மெயின் தேர்வு முற்றிலும் கட்டுரை வடிவில் எழுதும் தேர்வாக இருக்கும். விடைகள் எழுதுவதற்கு தனியாக தாள்கள் கொடுக்கப்படும். இத்தேர்வு கேள்வித்தாள் முற்றிலும் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் அமைந்திருக்கும்.
ஆட்டம்ஸ், மாலிக்யூல் அண்ட் நியூக்ளியை, கரண்ட் எலெக்ட்ரிசிட்டி, மோஷன் இன் ஒன் டைமன்ஷன், டூ அண்ட் த்ரீ டைமென்ஷன், எலெக்ட்ரோமேக்னட்டிக் இண்டக்ஷன், எலெக்ட்ரான்ஸ் அண்ட் போட்டான்ஸ், எலெக்ட்ரோஸ்டாட்டிக்ஸ், கிராவிடேஷன், ஹீட் அண்ட் தெர்மோ டைனமிக்ஸ் , லாஸ் ஆஃப் மோஷன், மேக்னட்டிக் எஃபக்ட் ஆஃப் கரண்ட்ஸ், ஒர்க், எனர்ஜி அண்ட் பவர் பாடங்களில் இருந்து இயற்பியல் பாடத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
வேதியியல் பாடத்தைப் பொருத்தவரை அட்டாமிக் ஸ்ட்ரக்சர், பயோமாலிக்யூல், கெமிக்கல் பாண்டிங், தெர்மோ டைனமிக்ஸ், ஹைட்ரோகார்பன், ஹைட்ரஜன், எஸ்.பி. ஐ. எஃப். எலிமண்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு பாடங்களில் இருந்து வேதியியல் பாடத்திற்கான கேள்விகள் கேட்கப்படும்.
பயாலஜி அண்ட் ஹியூமன் வெல்ஃபேர், பயோடெக்னாலஜி, டைவர்சிட்டி இன் லிவ்விங் வர்ல்ட், எக்காலஜி அண்ட் என்வயராண்மெண்ட், ஜெனிட்டிக்ஸ் அண்ட் எவாலியூசன், ரிபுரடக்ஷன், குரோத் அண்ட் மூவ்மெண்ட் இன் பிளான்ட்ஸ் உள்ளிட்ட பாடங்களில் இருந்து உயிரியல் பாட கேள்விகள் கேட்கப்படுகின்றன.
இந்தத் தேர்வுக்கான விண்ணப்பங்களை கனரா வங்கிகள் மற்றும் மத்திய செகண்டரி கல்வி வாரியத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கூடிய வசதியும் செய்யப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பிரிண்ட் அவுட் எடுத்து ஏ.ஐ.பி.எம்.டி. அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கக்கூடிய மாணவர்கள் கிரெடிட் கார்டு மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமாகவோ விண்ணப்பக் கட்டணங்களை செலுத்தலாம். பொதுப்பிரிவு மற்றும் ஓ.பி.சி. மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.700. எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300.
விண்ணப்பங்களை மிக கவனமாக நிரப்ப வேண்டும். அடித்தல் திருத்தல் ஏதும் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்பதை மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். மாணவர்கள் சமீபத்தில் எடுத்த விண்ணப்பத்தில் புகைப்படத்தை ஒட்டி அனுப்ப வேண்டும்.
ஏ.ஐ.பி.எம்.டி. முதல்நிலைத் தேர்விற்கான முடிவு சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் வெளியிடப்படும்.
ஏ.ஐ.பி.எம்.டி. முதல்நிலை நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் : ஏப்ரல் 1, 2012.
ஏ.ஐ.பி.எம்.டி. மெயின் தேர்வு நடைபெறும்
நாள் : மே 13, 2012.
விண்ணப்பங்கள் கிடைக்கும் தேதி மற்றும் விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதியை இத்தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. விரைவில் வெளியிடும்.
விவரங்களுக்கு : www.aipmt.nic.in
BY
EDUCATION NEWS
CAMPUS FRONT OF INDIA
CHENNAI
TAMIL NADU
thanks to campus front of india
0 comments:
Post a Comment