Sunday, January 1, 2012

காஸாவை தாக்க இஸ்ரேல் தயார் - முறியடிக்க முஸ்லிம் போராளிகளுக்கு அழைப்பு


வெகுவிரைவில் காஸா மீண்டும் தாக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைத் தம்முடைய படையணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரி பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது தரைப்படையினருக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதால், மூன்று வருடங்களுக்கு முன்னர் காஸா மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை விட இந்தப் போர் மிக வித்தியாசமானதாகவும் உக்கிரமானதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு இரவு நேரத் தாக்குதல் நடவடிக்கைகளில் இம்முறை அபரிமிதமான தேர்ச்சி அளிக்கப்பட்டிருக்கின்றது எனவும், அதிசக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்திப் பாதைத் தடைகளைத் துரிதமாகத் தகர்த்துக்கொண்டு காஸாவை நோக்கி அவர்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்வார்கள் எனவும் கான்ட்ஸ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் வெளியான இந்த முன்னறிவிப்புச் செய்தி குறித்துக் கருத்துரைத்த பலஸ்தீன் பாராளுமன்றப் பேச்சாளர் கலாநிதி அஹ்மத் பஹ்ஹார், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை காஸா மீது மற்றுமோர் ஆக்கிரமிப்புப் போரை நடத்துமாயின், அது ஒரு 'சுற்றுலா' போல் இன்பகரமானதாக இருக்காது" என்று குறிப்பிட்டுள்ளார். 

"இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தால் காட்டப்படும் இந்தப் 'பம்மாத்து', வெறுமனே ஓர் உளவியல் ரீதியான போர்த் தந்திரமே தவிர வேறில்லை. அவர்கள் இவ்வாறான 'அச்சுறுத்தல்' அறிக்கைகளின் மூலம் பலஸ்தீன் சுதந்திரப் போராளிகளின் மனோதிடத்தை அசைத்துப் பார்க்கலாம் என மனப்பால் குடிக்கின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமை வேறு. ஆனால், தற்போதுள்ள உலக அரசியல் நிலைவரம் முற்றிலும் வித்தியாசமானது. இஸ்ரேல் காஸா மீது முன்னர் மேற்கொண்டதைப் போன்ற சட்டவிரோதமான காட்டுமிராண்டி யுத்தம் ஒன்றை மீண்டும் முன்னெடுக்குமாயின், அதை எந்த ஒரு நாடும் அங்கீகரிக்கப் போவதில்லை. அவ்வாறு அங்கீகரிக்கும் பட்சத்தில், அது நிச்சயம் ஜனநாயக விரோதப் போக்குடைய ஓர் அடக்குமுறை அரசாகவே இருக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது." என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கலாநிதி அஹ்மத் பஹ்ஹார் பலஸ்தீன் விடுதலைப் போராளிகளுக்கு விடுத்துள்ள செய்தியில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கீழ்த்தரமானதும் கோழைத்தனமானதுமான சூழ்ச்சிகளை முறியடிக்கும் வகையில் மிகுந்த முன்னெச்சரிக்கையோடும் போதிய முன்னேற்பாடுகளுடனும் இருந்து, எஞ்சியிருக்கும் பலஸ்தீன் பிராந்தியங்களை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளரிடமிருந்து பாதுகாக்கும் வகையில் பரிபூரண அர்ப்பணிப்புடனும் மனோதிடத்துடனும் பணியாற்ற வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
thanks to yarlmuslim

0 comments:

Post a Comment