நகர வாழ்க்கைச் சூழ்நிலையில், வியர்க்க விறுவிறுக்க வெயிலில் அலைந்து திரிந்து வேலை செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்! வெயிலுக்கு முன்பாகவே அலுவலகத்தை அடைந்து, பகல் முழுக்க ஏசி அறையில் அடைந்துகிடந்து மாலையில் வீடு திரும்புவதுதான் பெரும்பாலானோரின் வாடிக்கையாகிப் போனது. இதனால், சருமத்தில் வெயில் படுவதற்கான வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது!
'' 'ஆஸ்டியோபெரோசிஸ்’ (Osteoporosis) என்னும் 'எலும்பு திண்மைக் குறைவு நோய்’ ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமே, நம் சருமத்தில் சூரிய ஒளி படாமல் இருப்பதுதான். உடலுக்குத் தேவையான 'வைட்டமின் டி’ சத்து குறையும்போது, எலும்புகள் பலவீனப்பட்டு வலுவிழந்து போய்விடும். இயற்கையிலேயே சூரிய வெளிச்சம் மூலம் 'வைட்டமின் டி’ கிடைக்குமாறு பழக்கப்படுத்திக் கொண்டால் பெரும்பான்மையான நோய்கள் நம்மை நெருங்காது, ஆரோக்கியமே நம்மை அரவணைத்துக் கொள்ளும்'' என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் மருத்துவ கண்காணிப்பாளரும் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் பழனி. தொடர்ந்து பேசியவர்...
''சூரியனில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி-தான் நம் உடலில் உள்ள எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவும். அந்த வைட்டமின் டி சத்து உடலுக்கு கிடைக்காதபோது, இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டு, கை எலும்புகளை இந்நோய் மிக விரைவில் தாக்கும்.
60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களையும், 50 வயதைக் கடக்கும் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினரையும், இந்த நோய் மிக எளிதில் தாக்குகிறது. மெனோபாஸ் ஸ்டேஜை அடையும் பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும். இதனால், எலும்புகளில் கால்சியம் சத்து குறைபாடு ஏற்பட்டு எலும்புகள் வலுவிழந்துபோவதால் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைப் பொறுத்தவரை டெஸ்டோஸ்டெரோன் (Testosterone) என்ற ஹார்மோன் குறைவாக இருந்தால் இந்த நோய் எளிதில் தாக்குகிறது.
இந்த நோய் தாக்கும். உடம்பில் ஜீரண சக்தி (Malabsorption syndromes) குறைபாடு இருந்து, ஊட்டச் சத்துக்கள் உடம்பில் சேராமல் போகும்போது இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும், கால்சியம் குறைபாடு, சிறுநீரகப் பாதிப்பு, மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வலிப்பு, ஆஸ்துமா நோய்க்காக எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு வகை மாத்திரைகளாலும் ஆஸ்டியோபெரோசிஸ் நோய் ஏற்படலாம்.
இந்த நோய்க்கு வலி, கட்டி போன்று எந்த அறிகுறியும் இல்லை. அதனால் எளிதில் இந்த நோய் பாதிப்பைக் கண்டறிய முடியாது. நமக்குத் தெரியாமலே நமது எலும்பில் பாதிப்பினை ஏற்படுத்துவதால், இது ஒரு 'சைலன்ட் கில்லர்’! விபத்தின்போது எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்று டாக்டர் எக்ஸ்ரே எடுத்து பார்க்கும் போதுதான் ஆஸ்டியோபெரோசிஸ் பாதிப்பு உள்ளதே பலருக்கும் தெரியவருகிறது. மிகவும் பலவீனமாக இருப்பவர்கள் தும்மினாலோ அல்லது குனிந்து ஒரு பொருளை எடுப்பதனாலோகூட எலும்பு முறிவு ஏற்படலாம்'' என்றவர், இந்த நோய் வராமல் தடுக்கும் வழிகளையும் கூறினார்.
''எந்த நேரமும் அலுவலகத்திலேயே அடைந்து கிடக்கக் கூடாது. சூரிய ஒளி தினமும் நம் சருமத்தில் படுமாறு பார்த்துக் கொள்ளவேண்டியது மிகவும் அவசியம். அல்லது வைட்டமின் - டி சத்துள்ள மாத்திரைகள் சாப்பிடலாம். கால்சியம் சத்து மிகுந்த பால், தயிர், வெண்ணெய், சோயா பீன்ஸ், புதினா கீரை வகைகள் மற்றும் பச்சைக் காய்கறி வகைகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். 60 வயதைக் கடந்த ஆண்கள், 50 வயதைத் தாண்டியப் பெண்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ஆஸ்டியோபெரோசிஸ் நோயால் பாதிப்படைந்தவர்களின் முறிந்த எலும்பினை நேராக்கி ஆபரேஷன் செய்து இணைக்கலாம். அல்லது எலும்பினை பசை போட்டு ஒட்ட வைக்கும் 'வெஸ்டிபுலர் நியூரோனிட்ஸ்’ (Vestibular neuronitis) சிகிச்சை அளிக்கலாம்.
உலகில், மூன்று நிமிடத்திற்கு ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்படுவதாக, உலக சுகாதார நிறுவனம் (WHO) மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட ஒரு சில மிகப்பெரிய மருத்துவமனைகளில் மட்டுமே
இதற்கான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அலுவலகமே கதி என கட்டிப் போட்ட கணக்காக ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்காமல், வெளியே வெயிலில் சிறிது நேரம் இருக்கும்படியான பணிகளையும் விரும்பி ஏற்று செய்யுங்கள். குழந்தைகளையும் வெயிலில் ஓடியாடி விளையாட விடுங்கள். எலும்புகள் திண்மைக் குறைவு அடையாமல், திடகாத்திரமாக இருக்கும்!'' என்கிறார் டாக்டர் பழனி.
JO.
thedipaar.com
0 comments:
Post a Comment