பேஸ்புக், கூகுள் போன்ற சமூக வலைத்தளங்களில், மத உணர்வுகளை புண்படுத்துவது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விஷயங்கள் இடம் பெறுவது கவலை அளிக்கிறது. இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, சம்பந்தபட்ட நிறுவனங்கள், சுயகட்டுப்பாட்டு முறையை செயல்படுத்த வேண்டும். இல்லையெனில், இதுகுறித்து விரிவாக ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'என, மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் கபில் சிபல்கூறியதாவது: பேஸ்புக், கூகுள் போன்ற சில சமூக வலைத் தளங்களில் மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையிலான செய்திகளும், கருத்துக்களும் இடம் பெறுகின்றன. இந்தியா போன்ற மிகப்பெரிய சமுதாயத்தை கொண்ட நாட்டில், விஷயம் தெரிந்த யாரும், இது போன்ற விஷயங்களை ஏற்க மாட்டர். எனவே, இந்த நிறுவனங்கள், இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு முன், சுய கட்டுப்பாட்டு முறையை செயல்படுத்தவேண்டும். இதற்காக, மீடியா சுதந்திரத்தில் நாங்கள் தலையிடுகிறோம் என கூறக் கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ, அதுபோன்ற விஷயங்களில் நாங்கள் ஒருபோதும் ஈடுபட்டது இல்லை. இதுகுறித்து சமீபத்தில் யாகூ, பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து, அரசின் கவலையை தெரிவித்தோம். அப்போது, இதற்காக சில நடவடிக்கைகளை எடுக்கிறோம் என, கூறிச் சென்றனர். ஆனால், எழுத்துப்பூர்வமாக இதற்காக எந்த உறுதியையும் அவர்கள் அளிக்கவில்லை.
அமெரிக்காவில் பின்பற்றப்படுவது போன்ற நடைமுறை, இங்கு பின்பற்றப்படுவதாக, அவர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் உள்ள நடைமுறைகள் வேறு, இங்குள்ள நடைமுறைகள் வேறு என்பதை, அவர்கள் உணர வேண்டும். இதை, அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டே தெரிவித்துள்ளது. இதே நிலை தொடருவதை ஏற்க முடியாது. சம்பந்தபட்ட நிறுவனங்கள், உணர்வுப்பூர்வமான தகவல்களை வெளியிடுவதில் சுய கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். இல்லையெனில், இதுகுறித்துவிரிவாக ஆலோசித்து, நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக, சில வழிகாட்டும் விதிமுறைகள் உருவாக்கப்படும். சம்பந்தபட்ட தகவல், எங்கிருந்து, யாரால் வெளியிடப்பட்டது என்பது பற்றிய விவரங்கள், வலைத்தள நிறுவனங்களிடம் கேட்கப்படும். குற்றம் செய்தோர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும், இந்த விதிமுறைகளில் வழி வகுக்கப்படும். பயங்கரவாதிகள், மின்னஞ்சல் மூலமாக தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளும்போது, அதுகுறித்த தகவல்களை கேட்டால், சில இணைய நிறுவனங்கள், அவற்றை தரத் தயங்குகின்றன. மேலும், சில நிறுவனங்கள் கோர்ட்டை நாடுகின்றன. இவ்வாறு, கபில் சிபல் கூறினார்.
yarlmuslim
0 comments:
Post a Comment