Tuesday, December 13, 2011

முல்லைப் பெரியாறு:மத்திய அரசும், உச்சநீதிமன்றமும் உடனடியாக தலையிட வேண்டும் – எஸ்.டி.பி.ஐ கோரிக்கை

e.abubacker
புதுடெல்லி:முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இரண்டு மாநிலங்களின் மக்கள் இடையே மோதல் சூழல் உருவாவதை தடுக்க மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர்
இ.அபூபக்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய பீதியூட்டும், மோதல் சூழலை முடிவுக்கு கொண்டுவரும் பொறுப்பு உச்சநீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் உள்ளது. ஐந்து மாவட்டங்களில் வாழும் மக்களை குறித்து கேரள மாநில கவலை அடையும் வேளையில், நான்கு மாவட்டங்கள் வறட்சியினால் தரிசாக மாறிவிடும் கவலை தமிழகத்திற்கு உள்ளது.
இப்பிரச்சனையில் பீதியையும், கலக்கத்தையும் விதைத்து உணர்ச்சிப்பூர்வமாக மாற்றி தங்களது குறுகிய நோக்கங்களுக்கு உபயோகிக்கும் முயற்சியில் இருமாநில அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன. அணையின் பலவீனத்தை கவனத்தில் கொண்டு காலதாமதமின்றி நீர்மட்டத்தை தாழ்த்தி கேரள மக்களின் பீதியை அகற்றவேண்டும். அதேபோல் தமிழக மக்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண்பதுதான் சிறந்தது.
கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட இரு மாநில அரசுகள் இடையே நல்லிணக்கத்தை நீடிக்கச் செய்வதற்கான மத்தியஸ்த முயற்சிகளுக்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். முல்லைப் பெரியாரின் பெயரால் நடக்கும் போராட்ட நிகழ்ச்சிகள் தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் இடையேயான மோதலாக மாறாதிருக்க எஸ்.டி.பி.ஐயின் தமிழக-கேரள தலைமைகள் கவனம் செலுத்தவேண்டும் என எஸ்.டி.பி.ஐயின் தேசிய செயற்குழு உத்தரவிட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு தொடர்பான அமளிக்கு இடையே இரண்டு மாநில மக்களின் எதிர்காலத்தை பாதிக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டம் சோர்வடையாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். இவ்வாறு இ.அபூபக்கர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment