Sunday, May 1, 2011

நேட்டோ படைகள் தாக்குதலில் கடாபி தப்பினார்-மகன் பலி


திரிபோலி: நேட்டோ படையினர் நடத்திய தாக்குதலில் லிபிய அதிபர் மும்மர் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதேசமயம், அவரது இளைய மகனும், 3 பேரப் பிள்ளைகளும் பலியாகி விட்டனர்.

லிபிய அரசு செய்தித் தொடர்பாளர் மூஸா இப்ராகிம் இதுகுறித்துக் கூறுகையில், லிபியாவில் உள்ள மக்களுக்கு ஆதிக்கப்படையினரால் எந்தவிதப் பாதுகாப்பும் இல்லை என்பதை இந்த சம்பவம் நிரூபிப்பதாக உள்ளது. அப்பாவி மக்களை நேட்டோ படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

திரிபோலியில் உள்ள ஒரு வீட்டைக் குறி வைத்து நேட்டோ படையினர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த வீடு தரைமட்டமானது. அந்த வீட்டில் அதிபர் கடாபியின் 29 வயது மகன் சைப் அல் அராப் தங்கியிருந்தார். இவர் ஜெர்மனியில் படித்தவராவார். தாக்குதலில் அராப் பலியாகி விட்டார். அதேபோல கடாபியின் 3 பேரப் பிள்ளைகளும் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நாங்கள் பழிவாங்குவோம் என்றார் இப்ராகிம்.

கடாபியின் அதிகம் அறியப்படாத மகன் அராப். இவர், தனது தந்தையின் அதிகார மையத்திற்குள் ஒருபோதும் இருந்ததில்லை. அரசியலிலும் ஆர்வம் இல்லாமல் ஒதுங்கியே இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாக்குதல் நடந்த வீட்டுக்கு பத்திரிக்கையாளர்களை லிபிய அரசு அதிகாரிகள் அழைத்துச்சென்று காட்டினர். மூன்று ஏவுகணைகள் வீட்டைத் தாக்கி அழித்திருந்தன. வீட்டின் மேற்கூரை முழுமையாக காலியாகி விட்டது.

இந்த தாக்குதலின்போது அப்பகுதியில் கடாபி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டார்.

0 comments:

Post a Comment