9 May 2011
பல நூற்றாண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம். மதினாவை தலைநகராக கொண்ட சாம்ராஜ்யத்தை முஹம்மது நபி அவர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரம். ஒரு திருட்டு சம்பவம் நடைபெறுகிறது, குற்றவாளியும் கைது செய்யப்படுகிறார். குற்றத்தை செய்தவர் பாத்திமா என்ற பெண்மணி. அதுவும் மக்சூமியா என்ற குலத்தை சார்ந்தவர். அந்த மக்களின் அளவுகோளின்படி உயர்ந்த குலத்தை சார்ந்தவர். நீதியை நிலைநாட்டும் சட்டங்களின் படி திருட்டிற்கு தண்டனையாக கை வெட்டப்பட வேண்டும்.
இப்பெண் மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் தண்டனை நிறைவேற்ற ஆயத்தங்கள் செய்யப்பட்டன. உயர் குலம் அல்லவா? பதைத்தனர் அக்குலத்தை சார்ந்தவர்கள். தங்கள் குல பெண்ணிற்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால் மொத்த குலத்திற்கும் அல்லவா இழுக்கு? என்ன செய்வது? முஹம்மது நபியிடம் சென்று தண்டனையை குறைக்க வேண்டுகோள் வைக்க வேண்டும். ஆனால் நீதியே வாழ்க்கையாக வாழும் அவரிடம் சென்று பேசுவதற்கும் பயம்.
இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்கள். முஹம்மது நபிக்கு மிகவும் நெருக்கமான நபர் மூலம் சிபாரிசை அனுப்பலாம் என்பது தான் அந்த முடிவு. தகுந்த நபரை கண்டுபிடித்தனர். முஹம்மது நபிக்கு மிகவும் பிடித்த அவர்களின் வளர்ப்பு மகன் ஸைத் பின் ஹாரிஸாவின் மகனான உஸாமா பின் ஸைத் தான் அந்த நபர். இந்த உஸாமா சிறுவாரக இருந்த போது அவரது மூக்கின் சளியை துடைப்பதற்கு நபியும் அவரது மனைவியும் போட்டி போட்டு கொள்வார்களாம். அந்த அளவிற்கு முஹம்மது நபியின் பாசத்திற்கு உரியவர்.
உஸாமாவிடம் செய்தியை சொன்ன போது அவரும் அதனை ஏற்று கொண்டு முஹம்மது நபியிடம் சென்றார். இளைஞரான உஸாமா சிபாரிசை முன் வைத்தவுடன் முஹம்மது நபியின் கண்கள் கோபத்தால் சிவந்தன. ‘அல்லாஹ்வின் சட்டங்களை மாற்றுவதற்கா என்னிடம் சிபாரிசு செய்ய வந்துள்ளீர்கள்?’ என்று கடிந்து கொண்டவர்கள், உஸாமாவிற்கும் கூடியிருந்த மற்றவர்களுக்கும் தெளிவான ஒரு செய்தியை கொடுத்தார்கள். ‘உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதற்கு காரணம் இதுதான். அவர்களில் பலஹீனமானவர்கள் தவறிழைத்தால் தண்டனையை நிறைவேற்றுவார்கள். பலமிக்கவர்கள் தவறிழைத்தால் அவர்களை விட்டுவிடுவார்கள்’.
இத்துடன் நிறுத்தவில்லை நபியவர்கள். மிகவும் தெளிவாக கூறினார்கள், ‘என்னுடைய மகள் பாத்திமா தவறிழைத்தாலும் அவர் மீதும் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்’. எத்தனை பொருள் நிறைந்த தீர்க்கமான வார்த்தைகள். அன்று கூடியிருந்தவர்களுக்கு மட்டுமல்ல நம்மையும் தான் சிலிர்க்க செய்கிறது இந்த சம்பவம். நீதி அனைவருக்கும் சமம் என்ற கோட்பாடு தான் நாட்டில் அமைதியை நிலை நாட்டியது. ஆட்சியாளர் மீது குடிமக்களுக்கு நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அதிகரித்தது.
இஸ்லாமிய வரலாற்றில் பரவி கிடக்கும் ஆயிரமாயிரம் சம்பங்களில் இதுவும் ஒன்று. முஹம்மது நபி மட்டுமல்ல, அவர்கள் வழி வந்த ஆட்சியாளர்கள் அனைவரும் நீதியை நிலைநாட்டினார்கள் என்பதற்கு வரலாறு சான்று.
தற்போது நடைபெற்று வரும் 2ஜி விசாரணையை பார்க்கும் போது இந்த சம்பவம் தான் நினைவிற்கு வருகிறது. தன்னுடைய மகள் கனிமொழியின் பெயர் குற்றப்பத்திரிகையில் இருக்கிறது என்பதை அறிந்தவுடன் அவசர அவசரமாக கட்சியின் உயர் மட்ட குழுவை கூட்டுகிறார் கருணாநிதி. அத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக மகள் டெல்லிக்கு சென்றால் தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சேர்த்து அனுப்பி வைக்கிறார். அதிக சம்பளம் வாங்கும் வழக்கறிஞரை நியமித்து ஜாமீனுக்காக போராடுகிறார். ‘குற்றம் சாட்டப்பட்டதால் மட்டும் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது’ என்று வியாக்கியானம் பேசுகிறார்.
‘நெஞ்சுக்கு நீதி’ எழுதும் கலைஞர் அவர்களே ஒரு முறை உங்கள் மனசாட்சியிடம் கேட்டு பாருங்கள். ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகள் சிறையில் இருக்கும் அப்பாவிகள் குறித்து என்றைக்காவது இந்த பொன்மொழியை உதிர்த்தீர்களா? மகள் என்றவுடன் பாசம் முன்னுக்கு வருகிறதோ? நீதியில் பாசத்திற்கு இடமில்லை என்பதை உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை.
மலைக்கும் மடுவிற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தான் இந்த இரண்டு ஆட்சிகள் இடையே நம்மால் பார்க்க முடிகிறது. முந்தைய ஆட்சியை அருமையான கொள்கையான இஸ்லாமும் அந்த கொள்கைக்காகவே வாழ்ந்த மக்களும் வழி நடத்தி சென்றார்கள். தற்போதோ சுயநலம், பதவி ஆசை, சம்பாதிக்கும் ஆசை இவைதான் இருக்கிறது. இவர்களிடமிருந்து ஆட்சியையும் எதிர்பார்க்க முடியாது, நீதியையும் எதிர்பார்க்க முடியாது. இதனால் தானோ என்னவோ காந்தியடிகள் கூறினார்..’இந்த நாட்டிற்கு உமரின் ஆட்சி வேண்டுமென்று’!
0 comments:
Post a Comment