Monday, May 9, 2011

உஸாமாவின் மரணமும் முடிவில்லாத மர்மங்களும்

osama
‘யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்பார்கள். அதைப்போல் உஸாமா பின் லாடன் இருக்கும் போதும் பத்திரிகைகளுக்கு நல்ல வியாபாரத்தை வழங்கினார். இறந்ததாக கூறப்பட்ட பின்னரும் வழங்கி கொண்டிருக்கிறார்.
உலகில் இவர் அளவிற்கு குறுகிய காலத்தில் எந்த மனிதனும் இந்த அளவிற்கு பரபரப்பாக பேசப்பட்டிருப்பானா என்பது சந்தேகமே. அவரது மனைவிகளின் எண்ணிக்கையில் இருந்து மரணம் வரை பெரும்பாலும் அனைத்துமே ஊகம் தான். இவரை கதாபாத்திரமாக கொண்டு வடிக்கப்பட்ட கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் எவ்வித குறைவும் கிடையாது.
1979 முதல் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் நடைபெற்ற ஆப்கான்-சோவியத் ரஷ்யா போரில் உஸாமா பங்கு பெற்றதாகவும் அதில் அவர் அமெரிக்காவின் உளவுத்துறையால் பயிற்றுவிக்கப்பட்டதாகவும் பெரும்பான்மையினர் கூறுவதுண்டு. ஆனால் இச்செய்திகள் எல்லாம் வெளிவர ஆரம்பித்தது அந்த போர் முடிந்து ஏறத்தாழ பத்து வருடங்களுக்கு பின்னர்தான்! இப்போரை குறித்து எழுதிய பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்களில் உஸாமாவின் பெயரை காண்பது மிகவும் அரிது.
அடுத்து உஸாமாவை உலகின் மிகப்பெரும் தீவிரவாதியாக மாற்றிய செப்டம்பர் 11 தாக்குதல்கள். இத்தாக்குதல்கள் குறித்து எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு இதுவரை உறுப்படியான பதில் எதுவும் இல்லை. ஆனால் இத்தாக்குதலை காரணமாக வைத்து இலட்சக்கணக்கான அப்பாவிகளை ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப்படைகள் கொன்று குவித்தன. உஸாமாவை சிறிது நாட்கள் மறந்த இவர்கள் ஈராக் அதிபர் சதாம் ஹூஸைனை தூக்கிலிட்டனர். இதற்கிடையே உஸாமா இறந்துவிட்டதாக பலமுறை செய்திகள் வெயியாகின.
குறுகிய காலத்தில் பரபரப்பான உஸாமாவின் பெயரை பலரும் மறந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். அவ்வப்போது சில சமயம் வீடியோக்கள் மூலம் காட்சி தருவார் உஸாமா. 2004ஆம் வெளிவந்த வீடியோவில் முதியவராக தோற்றமளித்த உஸாமா 2007ஆம் ஆண்டு வீடியோவில் மிகவும் இளமையாக காட்சி தருவார்!
மே 2 அன்று உஸாமா கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன. இதற்கு முன்னர் பல முறை உஸாமா மரணம் அடைந்ததாக தகவல்கள் வந்துள்ளன. ஆனால் இம்முறை அமெரிக்க அதிபரே செய்தியை அறிவித்ததால் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். உஸாமாவின் புதிரான வாழ்க்கையில் அவரின் மரணமும் புதிராகவே உள்ளது.
2001 ஆம் ஆண்டிலேயே அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்ததாகவும் அவருக்கு டயாலஸீஸ் செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. சர்க்கரை நோய் உள்ளிட்ட பிற நோய்களும் அவருக்கு உண்டு. இவ்வளவு நோய்களை வைத்து கொண்டு அவர் எப்படி மலைகளில் உயிர் வாழ்ந்தார்? அதுவும் டயாலஸீஸ் செய்து கொண்டு? அவர் மலைகளில் எல்லாம் வாழவில்லை. நம்மை விட வசதியாக பாகிஸ்தானில் வாழந்து வந்தார் என்று தற்போது கூறுகின்றனர்.
அதுவும் ஒன்றிரண்டு மாதங்கள் அல்ல, ஆறு வருடங்கள் அங்குதான் இருந்தாராம். அதுவும் எங்கே? பாகிஸ்தான் தலைநகருக்கு மிக அருகில், அதுவும் இராணுவ பயிற்சி முகாம் அருகில்! நம்ப முடிகிறதா?? காதில் பூவை சுத்தலாம், மொத்த கூடையையும் தூக்கி வைப்பது நியாயமா? மர்மங்கள் பல இருந்தாலும் இதில் பல படிப்பினைகளும் இருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த ஆரம்பித்த நாளில் இருந்து பாகிஸ்தான் உடனான அதன் உறவு மிகவும் நெருக்கமானது. வருடந்தோறும் பல பில்லியன் டாலர்களை உதவியாகவும் ஆயுதங்களாகவும் வழங்கியது அமெரிக்கா. இதற்கு பிரதிபலனாக ஆப்கானிஸ்தானை மட்டுமல்ல தனது குடிமக்களை அமெரிக்கா கொலை செய்ததையும் பாகிஸ்தான் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்காவின் உளவுத்துறையினர் பாகிஸ்தானில் சுதந்திரமாக சுற்றி திரிந்தனர்.
இதனிடையே சில மாதங்களுக்க முன் நடைபெற்ற ரேமண்ட் டேவிஸ் விவகாரம் இருவருக்கும் இடையில் இருந்த தேனிலவை பாதியில் முடித்து வைத்தது. பாகிஸ்தானின் நடவடிக்கைகளால் அதிர்ந்த அமெரிக்கா சரியான தருணத்தை எதிர்பார்த்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் உளவுத்துறையில் தனக்கு சாதகமானவர்களின் உதவியுடன் உஸாமா நாடகத்தை அமெரிக்கா நடத்தியதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இல்லையென்றால் சுதந்திரமான மற்றொரு நாட்டிற்குள் வந்து ஏறத்தாழ ஒரு மணிநேரம் சர்வ சாதாரணமாக இந்த நாடகத்தை நடத்தி விட்டு செல்ல முடியுமா? இத்துடன் நிறுத்திக் கொண்டதா அமெரிக்கா? இல்லை…தேவைப்பட்டால் இது போன்று இன்னும் தாக்குதல்களை பாகிஸ்தானில் நடத்துவோம் என்று வெளிப்படையாகவே கூறியுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.
எங்களை பகைத்துக்கொண்டு உன்னால் எதுவும் செய்ய முடியாது, எங்களால் எதுவும் செய்ய முடியும் என்று பாகிஸ்தானிற்கு தெரிவிப்பதற்குதான் இந்த தாக்குதல் நாடகம். அமெரிக்காவுடன் உறவு கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு பாகிஸ்தான் நல்லதொரு உதாரணம். இந்த படிப்பினை பாகிஸ்தானிற்கு மட்டுமல்ல..நமக்கும்தான்.

0 comments:

Post a Comment