Monday, October 29, 2012

அணுவுலை வேண்டாம்: தடையை மீறி தமிழக சட்டசபை முற்றுகையிட படுமா?


koodangulam

சென்னை:திட்டமிட்டபடி தமிழக சட்டசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்த உள்ளதாக கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார். இப்போராட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சி இந்த போராட்டத்தில் பங்கெடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவை, உடனடியாக விலக்கி கொள்ளவேண்டும் போராட்டக்காரர்கள் மீதான எல்லா வழக்குகளையும் திரும்ப பெற வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். மக்களின் கோரிக்கையை ஏற்று அணு உலையை மூட வேண்டும்-என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கூடங்குளம் அணு உலைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் நாளை மறுநாள் (29.10.2012) சட்ட மன்ற முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. இந்தப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சி பங்கேற்கும். பொதுமக்களும், அறிவுஜீவிகளும், மாணவர்களும், வியாபாரிகளும், சமூக நல அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் நமது எதிர்கால தலைமுறையின் நலன் கருதி நாளை மறுதினம் நடைபெற உள்ள சட்ட மன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்குமாறும், ஆதரவு தந்து இப்போராட்டத்தினை வெற்றி பெற செய்யுமாரும் கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
கூடங்குளம் அணுமின் நிலையத்தை நிரந்தரமாக மூடக்கோரி சென்னையில் சட்டசபை கட்டிடத்தை முற்றுகையிட்டு அக்டோபர் 29-ம் தேதி (இன்று) பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று போராட்டக் குழுவினர் அறிவித்து இருந்தனர். இந்த முற்றுகையில், அணு உலை எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சியினரும் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய உதயகுமார், “அறவழியில் நடத்த இருக்கும் எங்கள் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். எல்லாவற்றையும் சமாளித்து திட்டமிட்டபடி நாங்கள் அறிவித்த போராட்டம் சென்னையில் நடைபெறும். எங்கள் போராட்டத்தை ஆதரிக்கும் அனைத்து கட்சியினரையும் ஒருங்கிணைத்து வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தி முடிப்போம்”என்றார்.
போராட்டத்தில் பங்கேற்பதற்காக உவரி, பெரியதாழை, கூத்தங்குழி உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களில் இருந்து மீனவ மக்கள் சென்னைக்கு சென்றுள்ளனர். மொத்தமாக பஸ் அமர்த்தி சென்றால், போலீசாரால் திருப்பி அனுப்பப்படலாம் என்பதால் தனித்தனியாக பிரிந்து கூடங்குளம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சென்னை சென்று இருப்பதாக கூறப்படுகிறது.
இடிந்தகரை, கூடங்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் அதிகமாக சென்றுள்ளார்களா? என்பது தெரியவில்லை.
சென்னை சென்றால் கைது செய்யப்படலாம் என்பதால் உதயகுமார் மற்றும் போராட்டக் குழுவைச் சேர்ந்த புஷ்பராயன், முகிலன் உள்ளிட்டவர்கள் கூத்தங்குழி கிராமத்திலேயே இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் பாதுகாப்பு பணியில் 8 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment