Saturday, October 20, 2012

பத்திரிகையாளர் காஸ்மிக்கு பிணையில் விடுதலை!

syed ahamed kasmi

புது தில்லி : கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்டிருந்த பத்திரிகையாளர் செய்யித் முஹம்மத் அஹமத் காஸ்மியை உச்சநீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார். டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே பிப்ரவரி 13 அன்று ஒரு காரில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
பத்திரிகையாளர் காஸ்மியின் மகன் ஷவ்ஸாப் காஸ்மி இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட முதல் நாள் முதலே தன்னுடைய தந்தை அப்பாவி என்று தாங்கள் கூறி வந்ததாகவும், இந்த நம்பிக்கையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும் அவர் கூறினார்.
“நான் இந்த நீதிமன்றத்தை நம்புகின்றேன். என் தந்தைக்கு ஆதரவாகக் கூட நின்ற அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
50 வயது நிரம்பிய பத்திரிகையாளர் காஸ்மியை கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் 6ம் தேதி கைது செய்தார்கள். இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது என்று இவரைக் கைது செய்த பின் அப்பாவி சிறுபான்மையினரைக் குறி வைப்பதில் பெயர் போன டெல்லி போலீஸ் கூறியது.
ஆனால் ஊடகச் சகோதரர்கள் விடவில்லை. அவரது வழக்கில் நிறைய ஓட்டைகள் இருப்பதை அவர்களும், காஸ்மியின் குடும்பத்தாரும் சுட்டிக்காட்டினர். தலைமை நீதிபதி அல்தமஸ் கபீரின் தலைமையில் கூடிய அமர்வு அவருக்கு ஜாமீன் வழங்கியது. அத்தோடு அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டது.
பத்திரிகையாளர் காஸ்மி கைது செய்யப்பட்டவுடன் “காஸ்மி ஆதரவுக் குழு” ஒன்று உருவாக்கப்பட்டது. அவரது விடுதலைக்காக பாடுபட்டு வந்த இந்த அமைப்பில் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள் ஒருங்கிணைந்திருந்தனர். பத்திரிகையாளர் காஸ்மி பிணையில் விடுதலை செய்யப்பட்டதை “காஸ்மி ஆதரவுக் குழு” வரவேற்றுள்ளது. ஆனால் அரசுத் தரப்பிலிருந்தும், டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவிலிருந்தும் காஸ்மிக்குக் கொடுக்கப்பட்ட தடங்கல்களை அது விமர்சித்தது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜாமீன் வழங்குவதற்குண்டான கால வரையறைக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய முடியவில்லை டெல்லி போலீசாரால். இருந்தபோதிலும் அவரை சிறையில் வைக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே அவர்களுக்கு இருந்தது என்று  காஸ்மி ஆதரவுக் குழுவினர் கூறினர்.
ஒரு சுதந்திர உர்து பத்திரிகையாளரான காஸ்மி மேற்காசியாவைப் பற்றி நன்கறிந்தவர். ஈரானுக்கு பத்திரிகை விஷயமாக அடிக்கடி சென்று வருபவர். இதனை வைத்து இவரைப் பிடித்து டெல்லி போலீஸ் அநியாயமாகக் கைது செய்தது.
டெல்லியை மையமாக வைத்து பத்திரிகைப் பணிகளைச் செய்து வரும் பத்திரிகையாளர் காஸ்மியை டெல்லியில் லோதி சாலையிலுள்ள இந்திய இஸ்லாமியக் கலாசார மையத்திற்கு வெளியே வைத்து டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் கீழ் கைது செய்தது. அவருடன் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய திருப்பம் கிடைத்துவிட்டது என்று ஆரம்பத்தில் டம்பம் அடித்த டெல்லி போலீசின் சுருதி நாட்கள் செல்லச் செல்ல மங்கிக் கொண்டே வந்தது. அவரது வங்கிக் கணக்கில் கணக்கில் வராத பணம் உள்ளது, சட்டவிரோத பணப் பரிமாற்றம் போன்ற அவர் மீது வாரியிறைக்கப்பட்ட போலீசின் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்பதை பத்திரிகையாளர் காஸ்மியின் குடும்பத்தார் நிரூபித்தனர். அந்தப் பணம் அமீரகத்தில் ஷார்ஜாவில் பணி புரியும் அவருடைய மகன் ஷவ்ஸாப் அனுப்பியது.
பத்திரிகையாளர் காஸ்மியின் குடும்பத்தார் தங்களை போலீஸ் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் கூறினர்.

0 comments:

Post a Comment