Sunday, October 14, 2012

“பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது!” : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு சூடு

news pa

புது தில்லி : பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனி மனித கண்ணியத்தை பத்திரிகைகள் குலைக்கக் கூடாது என்றும், அப்படி பத்திரிகை தர்மங்களை மீறும் பத்திரிகைகள் சட்டரீதியான நடவடிக்கைகளைச் சந்திக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் விதமாக செய்தி வெளியிட்டது ஒரு பெங்காலி பத்திரிகை. அதனைக் கண்டித்துப் பேசும்பொழுது நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இவ்வாறு கூறினார். அவர் அந்தப் பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடவில்லை.
ஸ்ரீபிரியா ரங்கராஜன் என்ற அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி குறித்த செய்தி அந்தப் பத்திரிகையில் கடந்த மாதம் வெளியாகியிருந்தது. அவருக்கு நுரையீரலில் புற்று நோய் இருப்பதாகவும், அது முற்றிப் போய் இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை எடுப்பதற்காக அவருக்கு சென்னைக்குச் செல்ல விடுப்பு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அது செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் அந்தப் பெண் அதிகாரியின் நடத்தை குறித்து புகார் கிடைத்ததையடுத்து மேற்கு வங்க முதல்வர் அவர் பணி புரிந்து வந்த ஹூக்ளி மாஜிஸ்திரேட்டு பதவியிலிருந்து அவரை நீக்கியதாகவும் அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இன்னும் அந்த அதிகாரி மீது நிறைய குற்றச்சாட்டுகளை அது வெளியிட்டுள்ளது என்று நீதிபதி மாரக்கண்டேய கட்ஜு தெரிவித்தார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பிரதிநிதிகள் தன்னைச் சந்தித்து இந்தப் பத்திரிகைச் செய்தி குறித்து ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்து புகார் அளித்ததாக அவர் கூறினார்.
“மேற்கு வங்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பொய்யான, எந்த அடிப்படை ஆதாரமுமற்ற, களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் வெளியிடப்பட்ட இந்தச் செய்தி குறித்து மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர். மேற்கு வங்க அரசின் செயலாளர் (மனித வளம்) இது குறித்து அந்தப் பத்திரிகைக்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். அதனை முக்கிய இடத்தில் வெளியிடுவதற்குப் பதிலாக எங்கோ ஒரு மூலையில் அதிகம் பார்வை படாத இடத்தில் சிறிய எழுத்துகளில் 30.09.12 அன்று அந்தப் பத்திரிகை விஷமத்தனமாக வெளியிட்டுள்ளது” என்று நீதிபதி கட்ஜு கூறினார்.
“இப்படி ஓர் இளம் பெண் அதிகாரி மீது அபாண்டமாக செய்தி வெளியிடுவது அந்தப் பத்திரிகையின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. வெறும் பரபரப்பை மட்டுமே மையமாக வைத்து அது இயங்குவதைக் காட்டுகிறது” என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு ஆவேசப்பட்டுக் கூறினார்.
“இதன் மூலம் அனைத்துப் பத்திரிகைகளையும் பிரஸ் கவுன்சில் எச்சரிப்பது என்னவெனில் பத்திரிகையின் அனைத்து தர்மங்களையும் மீறும் விதமாக செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.
நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு பிரஸ் கவுன்சில் தலைவராகப் பொறுப்பேற்றது முதல் இந்திய பத்திரிகைகளின் பொறுப்பற்ற தன்மையையும், அவை பாரபட்சமாக செய்திகளை வெளியிட்டு குழப்பங்களை ஏற்படுத்துவதையும், வியாபார நோக்கத்தை மையமாக வைத்து பொய்யான செய்திகளை பரபரப்பாக வெளியிட்டு ஒரு சமுதாயத்தையே தீவிரவாதச் சமுதாயமாகச் சித்தரிக்க முனைவதையும் கண்டித்து வருகிறார்.
அவர் பிரஸ் கவுன்சில் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும் செயல்படும் விதம் குறித்து சி.என்.என். & ஐபிஎன் சேனலில் கரன் தாப்பர் நடத்தும் ‘’டெவில்ஸ் அட்வகேட்’’ நிகழ்ச்சியில் பங்கேற்று கூறிய விஷயங்கள் நாடு முழுவதும் விவாதமானது.
“எனக்கு மீடியா பற்றி நல்ல  அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள்  நலனுக்கு எதிராகச் செயல்படுவதையும் பார்க்கிறேன். இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதைப் பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால்  பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாச்சாரங்களைப் பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானவை அந்த விஷயங்கள்தான் என்பது போல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.”
“இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களைப் பிளவு படுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நடக்கிறது? ஒரு ஊரில்  குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்  ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதீன்  கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல்  ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம்  பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி  தெரியும் என்றால் எஸ்.எம்.எஸ். வந்தது, இமெயில் வந்தது என்று  காட்டுகிறார்கள். எஸ்.எம்.எஸ்., இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு  விஷமி அனுப்பியிருக்கலாம். அதைப் பெரிதாக ​தொ​லைக்காட்சியில் காட்டி  மறுநாள் பத்திரிகைகளிலும்  பிரசுரிக்கும்போது  என்ன ஆகிறது?”
“முஸ்லிம்கள் எல்லோரும் குண்டு வைப்பவர்கள்,  தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக  இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான்  உண்மை. மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது. குண்டு வெடித்த சிறிது  நேரத்தில் எஸ்.எம்.எஸ். வந்தது, இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?’‘
இவ்வாறு அவர் அந்தப் பேட்டியில் காரசாரமாகக் கூறியிருந்தார். ஆனால் இதனால் எந்தப் பலனும் இதுவரை ஏற்பட்டதாகத் தெரியவில்லை. இன்றும் மீடியா ஒரு சமுதாயத்தவரை குற்றப் பரம்பரையாகச் சித்தரிப்பது தொடந்துகொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

0 comments:

Post a Comment